தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடிக்கொண்டிருக்கும் போது, அனுமதி கொடுத்த அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் வளாகத்தில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்வதற்காக ஆலையை விரிவாக்கும் பணியை தற்போது வேதாந்த குழுமம் மேற்கொண்டு வருகிறது. இதிலிருந்து வெளியாகும் கழிவுகளால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாகவும், புற்றுநோய் ஏற்படுவதாகவும் குமரெட்டியாபுரம் உட்பட கிராம மக்கள் பலரும் ஆலையை மூடக்கோரி கடந்த பிப்ரவரி மாதம் முதல் 48 நாட்களாக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் விரைவில் அரசியலில் கால்பதிக்குள்ள உள்ள ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக, நேற்றைக்கு முன்தினம் முதல் 15 நாட்கள் மூடப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.