ஏமன் துறைமுகத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தால் அகதிகளின் நிவாரண பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
ஏமனில் கடந்த 3 வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் உள்நாட்டிலும் அகதிகளாக ஏராளமானோர் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
இதனால் இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளும், தொண்டு நிறுவனங்களும் அனுப்பி வருகின்றன. இதனடிப்படையில் 2.2 கோடி மக்களில் 75 வீதமானோர் நிவாரண பொருட்களையே நம்பி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இதனால் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள ஹொடைடா துறைமுகத்தில், அகதிகளுக்கான நிவாரண பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு, தேவையின் போது வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தால், அகதிகளுக்கான நிவாரண பொருட்கள் ஏராளமானவை எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.