மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அதிக வாக்காளர்களைக் கொண்ட பழம் பெரும் கிராமமான களுதாவளையில் கடந்த 45 வருடங்களாக அந்த கிராமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளா் ஒருவா் நியமிக்கப்படவில்லை என அக்கிராமத்து பெரியோா்கள் தெரிவிக்கின்றனா்.
கல்வி, விவசாயம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் மிகப் பிரபலமான களுதாவளைக் கிராமத்தில் இருந்து அரசியல் தலைவர் உருவாவதில் பல சிக்கல்கள் நிலவுவதாக இவா்கள் தெரிவிக்கின்றனா்.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அதிகமான வாக்காளா்களை கொண்ட களுதாவளை கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு வட்டாரங்களில் அமோக வெற்றி பெற்று 20 வீதமான உறுப்பினர்களை தெரிவு செய்ய இக்கிராம மக்களின் பங்களிப்பு முக்கியம் பெற்றுள்ளது.
இந்நிலையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு இக்கிராமத்தைச் சேர்ந்தவர் தவிசாளர் பதவியைப் பெறுவதென்பது உறுதியான நிலையில் இதனை தடுப்பதற்கு ஒரு சில கிராமத்தவர்கள் செயற்படுவது கவலையாக உள்ளதாக களுதாவளைக் கிராம மக்கள் ஆதங்கப் படுவதாக அக்கிராமத்து பெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.
பல சவால்களுக்கு மத்தியிலும் தமது கிராமத்திலுள்ள இரண்டு வட்டாரங்களைக் கைப்பற்றிய களுதாவளை கிராமத்துக்கு, அயல் கிராமங்களைச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவு நல்கவேண்டும் என வேண்டுவதோடு, இது தவறும் பட்சத்தில் மாற்றுக் கட்சியினர் மீண்டும் களுதாவளை கிராமத்தில் வேர் ஊன்றுவதற்கு சந்தர்ப்பமாய் அமைந்து விடும் எனவும் அக் கிராமத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.