இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்பியும், நம்பிக்கையின்மையால் அங்கு திரும்பி செல்வதில் இருவித மனநிலையுடன் இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தவித்து வருகின்றனர்.
இந்தியாவின் தென்கோடியில் ராமேஸ்வரத்தில் இருந்து வெறும் 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இலங்கை தீவு, பண்பாட்டு, கலாச்சாரத்தில் தமிழகத்துடன் பின்னிபிணைந்தது.
மன்னார் தொடங்கி அனுராதபுரம், கொழும்பு வரை தமிழர்களும், மத்திய இலங்கை தொடங்கி தென்இலங்கை வரை சிங்கள மக்களும் வாழ்ந்து வருகின்றனர். மத்திய இலங்கையில் கணிசமான அளவில் இந்தியா வம்சாவழி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அதேநேரத்தில் பெரும்பான்மை இனமாக சிங்களர்கள் உள்ளனர். பிரிட்டிஷார் இலங்கையை முழுமையாக கைப்பற்றும்போது அங்கு மூன்று தமிழ் அரசுகள் கோலோச்சின.
அப்போதும் சரி, இலங்கை விடுதலை அடையும்போதும் சரி அங்கு தமிழர்கள் சிங்களர்களுடன் சமஅந்தஸ்துடன் வாழ்ந்து வந்தனர். அதேநேரத்தில் பொருளாதார ரீதியிலும் தமிழர்கள் மேலோங்கியிருந்தனர்.
இதனால் நாடு விடுதலை அடைந்தவுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்த சிங்களர்கள் தமிழர்களை இனரீதியான பாகுபாட்டுடன் அணுக தொடங்கினர். இதற்கு அங்குள்ள சிங்கள அரசியல்வாதிகளும், அரசியலில் செல்வாக்கு செலுத்திய பவுத்த பிக்குகளும் காரணமாக அமைந்தனர்.
இது 1983ல் பெரும் கலவரமாக வெடித்தது. சிங்களர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் தங்கள் பூர்வீக பூமியில் இருந்து அகதிகளாக உலகம் முழுதும் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தனர்.
கடந்த 1983ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி முதல் இதுவரை தமிழகத்துக்கு நான்கு கட்டங்களாக, 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 அகதிகள் வந்துள்ளனர். அரசு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபை தூதரக உதவியுடன் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திரும்பி சென்றுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 55 இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களில் 64 ஆயிரத்து 931 பேர் 129 முகாம்களிலும், 37 ஆயிரத்து 73 பேர் போலீஸ் நிலையங்களில் தங்களது பெயர்களை பதிவு செய்து விட்டு வெளியில் தங்கியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மேல்மொணவூர், குடியாத்தம், சின்னபள்ளிக்குப்பம், பாணாவரம், வாலாஜா அணைக்கட்டு, மின்னூர் என 6 இடங்களில் முகாம்கள் உள்ளன.
இவர்களுக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசியும், மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும், குடும்ப தலைவருக்கு மாதம் 1,000ம், 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 750, அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு 400 என உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை தவிர வெளியிலும் சென்று வேலைசெய்து விட்டு மாலையில் முகாம்களுக்கு திரும்பி விடுகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் அகதிகளாக தங்கியுள்ள இலங்கை தமிழர்களில் இங்கு வந்து பிறந்தவர்கள், அங்கிருந்து வரும்போது பள்ளி, கல்லூரிகளில் படித்து வந்தவர்கள் ஆகியோர் இங்கு அரசின் உதவியுடன் கல்வி கற்று பட்டதாரிகளாகவும், பட்டயப்படிப்பு முடித்தவர்களாகவும், பொறியியல் படிப்பு முடித்தவர்களாகவும் உள்ளனர்.
இவர்களுக்கு இங்கு அரசு வேலை கிடையாது என்பதால் தனியார் நிறுவனங்களில் மிக குறைந்த ஊதியத்தில் வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இப்போதைய நிலையில் இலங்கை தமிழ் அகதிகளில் 3 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. அங்கு இந்தியா மற்றும் ஐநா உதவியுடன் தமிழர் பகுதிகளில் மீள்கட்டமைப்பு பணிகளுடன், மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் போர் முடிந்த 2009ம் ஆண்டு மே தொடங்கி 2014ம் ஆண்டு வரை இந்தியாவில் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்ப விரும்புவதாக இலங்கையில் செயல்பட்டு வரும் ஈழஅகதிகள் மறுவாழ்வு அமைப்பின் பொருளாளர் சந்திரஹாசன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அப்போது அவர் கூறுகையில், ‘இந்தியாவில் விருந்தாளியாக எத்தனை ஆண்டுகள் தங்க முடியும். இலங்கை என்றால் தங்களுக்கு ஓட்டுரிமை, நிரந்தர குடியுரிமை கிடைக்கும்’ என்று கூறினார்.
அதற்கேற்ப அக்காலக்கட்டத்தில் இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்த 65 ஆயிரம் பேரில் 8 ஆயிரம் பேர் மட்டும் தாயகம் திரும்பினர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.
இதற்கு மாநில மக்கள் மத்தியிலும் ஆதரவு கிட்டிய நிலையில் மத்திய, மாநில அரசுகள் இவ்விஷயத்தில் மவுனம் சாதித்து வருகின்றன.
அதேநேரத்தில் தமிழகத்தில் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளில் இந்திய மண்ணில் பிறந்த இந்த தலைமுறையை சேர்ந்தவர்கள், ‘நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்களாகவே வாழ்ந்து விட்டோம்.
எங்கள் முன்னோர்களின் தாயகம் இலங்கை என்றாலும் நாங்கள் இந்த மண்ணில் பிறந்து இங்கேயே படித்து முடித்து இந்திய குடிமகனாகவே வாழ்ந்து விட்டோம். எங்களை இலங்கை போக சொன்னாலும் எங்களால் அங்கு இயல்பான வாழ்க்கையை வாழ முடியுமா? என்பது சந்தேகம்தான்’ என்று கூறுகின்றனர்.
ஆனால் மறுபுறமோ, ‘எங்களை இந்த மண் புறக்கணிக்கிறது என்பதும் எங்களுக்கு புரிகிறது. எங்களை இலங்கை மண்ணின் மைந்தர்களாகவே பார்க்கின்றனர். அதனால் எங்கள் பூர்வீகத்துக்கு சென்று வாழ வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.
அதற்கான உத்தரவாதத்தை இரண்டு நாட்டின் அரசாங்கங்களும் தர வேண்டும். அப்படி இலங்கை திரும்பினால், சுயகவுரவத்துடன், இலங்கையின் முன்னேற்றத்துக்கு எங்கள் ஆற்றலை பயன்படுத்துவதில் எந்த தடையும் இருக்காது என்றும் கூறுகின்றனர்.
இதே நிலைபாட்டைதான் 30 ஆண்டுகளாக இங்கேயே முகாம்களில் தங்கியுள்ள இதர இலங்கை தமிழ் அகதிகளும் கூறுகின்றனர்.
இத்தகைய இரட்டை மனநிலையில் தவித்து வரும் இலங்கை தமிழர்களிடம் பேசி அவர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் அங்கு அவர்களுக்கான கவுரவமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும்.
இங்கேயே வசிக்க விரும்பும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை முகாம்களை விட்டு வெளியில் குடியமர்த்த வேண்டும். இதுவே அவர்களுக்கான உண்மையான நிவாரணமாகவும், தீர்வாகவும் அமையும் என்றே நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.