பழைய முரண்பாடுகளை தொடர்ந்தும் நாம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவ்வாறு அதை தொடர்ந்தும் முன்னெடுத்துக்கொண்டிருப்பதால் பாதிக்கப்படுவது எமது மக்களே. ஆகவே நாம் முரண்பாடுகளுக்குள் உடன்பாடுகண்டு முன்னோக்கிச் செல்லவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியின் ஒன்றின் அரசியல் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
ஏற்கனவே நாட்டில் நடந்த அழிவு யுத்தத்தினால் மூன்று தசாப்த காலத்தை தொலைத்து விட்டு அவலங்களை சுமந்து வாழும் எமது மக்களை, பொருத்தமற்ற திசைவழி நோக்கி வழிநடத்துவதும் அர்த்தமற்ற உசுப்பேற்றல்களை பேசுவதும் மீண்டும் அவர்களை பின்நோக்கித் தள்ளுவதாகவே அமையும்.
ஆகவே தான் நாம் புதிய சிந்தனை வழியில் நிதானத்தோடும் சகிப்புத் தன்மையோடும் சிந்திக்கின்றோம்.
அந்த வகையில் எதிர்கால செயற்பாடுகள் எப்படி அமையும் என்று இன்றைய நிலைமைகளோடு எதிர்வுகூற விரும்பவில்லை.
அது அக்கால சூழலையும் அரசியல் களநிலைமையையும் கொண்டுதான் அமையும் எனத் தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் எமது மக்களின் மீள் எழுச்சிக்காகவும் மக்களின் சிறந்த ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் விட்டுக்கொடுப்போடும் சகிப்புத் தன்மையுடனும் எமக்கு முன்னால் உள்ள அரசியல் சவால்களை சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.