சீனாவானது பயண நேரத்தை குறைப்பதற்காக தென்சீன நகரங்களான சுகாய், மேகாவ் ஆகியவற்றையும் ஹாங்காங்கையும் இணைக்கும் பாலத்தை சீன கட்டி முடித்துள்ளது.
சீனாவின், ஹாங்காங், மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை இணைக்கும் விதத்தில் கடல் மீது 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரை மற்றும் கடலுக்கு அடியில் சுரங்கப் பாலம் என இரு விதமாக பாலத்தை சீனா கட்டி உள்ளது. இதற்காக, கடல் நடுவில், 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், பாறைகள் மற்றும் மண்ணால் நிரப்பப்பட்டு, இரண்டு தீவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்த தீவில், 59 இரும்புத் தூண்கள் நடப்பட்டு பாலம் கட்டப்பட்டது. கடலுக்கு அடியில் 28 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதனைத் தாங்கும் வகையில் இந்தப் பாலம் கட்டப்பட்டு உள்ளது
சுமார் 6,720 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது, 50 கிலோ மீட்டர் நீள பாலத்தில், 6 கிலோ மீட்டர் தூரம், கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரிஸின் ஈபில் டவருக்கு செலவானதைப் போன்று 60 ஈபில் டவர்களைக் கட்டும் அளவு இரும்பு இந்த பாலத்திற்கு செலவாகியுள்ளது என சீனாவின் ஜினுவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இதன் திறப்பு விழா குறித்து ஏதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்தப் பாலத்தை 120 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்றும் பயண நேரம் பாதிக்கும் கீழாக குறைவதால் சீனாவின் வர்த்தகம் பெருகும் என்றும் சீனா கூறி வருகிறது.
ஹாங்காங் மக்களிடம் நற்பெயரை வாங்குவதற்காகவும் தங்கள் மீது ஒரு பற்று ஏற்படுத்தவும் சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.