இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேரமுடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆட்டநேர முடிவில் ஜோ ரூட் 30 ஓட்டங்களுடனும், டாவிட் மாலன் 19 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
கிறிஸ்சர்ச் மைதானத்தில் நேற்று முன் தினம், ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, களத்தடுப்பை தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸிற்காக 307 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஜோனி பைர்ஸ்டோவ் 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் டிம் சௌத்தீ 6 விக்கெட்டுகளையும், போல்ட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைதொடர்ந்து, முதலாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 278 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக வட்லிங் 85 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் பிராட் 6 விக்கெட்டுகளையும், ஆண்டசன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
29 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, தற்போது, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவுவரை 231 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.