திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என உறுதி தந்த செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு நன்றி என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து கடந்த மார்ச் 1-ம் தேதியிலிருந்து புதிய படங்கள் எதனையும் வெளியிடாமல் தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து வரும் புதன்கிழமை பேரணியாக சென்று முதல்வரிடம் கோரிக்கை மனுவை அளிப்போம் என விஷால் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தயாரிப்பாளர் சங்க பிரச்னை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. திரைத்துறை பிரச்னையை தீர்க்க தேவைப்பட்டால் தனி வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறினார்.
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்த விஷால், திரைத்துறை சம்மந்தப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.