மத்திய பிரதேசத்தில் குழந்தையை வெள்ளையாக்க ஆசைப்பட்டு, குழந்தையின் தாய் கருங்கல்லில் தேய்த்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் நிஷத்புரா பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுதா திவாரி. இவரது கணவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒப்பந்த ஊழியராக அப்பணியாற்றி வருகிறார். இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், உத்திரகாண்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.
ஆனால் குழந்தை கருப்பாக இருந்ததால், வெள்ளையாக்க உறவினர்கள் சிலரிடம் யோசனை கேட்டுள்ளார். அவர்கள் கூறியபடி, தற்போது 5 வயதாகும் அந்த குழந்தையின் உடலில் கருங்கல்லை வைத்து தேய்த்து வந்துள்ளார். இதனால் குழந்தை படும் வேதனையை பொறுத்துக்கொள்ளமுடியாத சுதாவின் மூத்த சகோதரியின் மகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து குழந்தையை மீட்ட காவல் துறையினர் குழந்தைகள் நல காப்பகத்திடம் குழந்தையை ஒப்படைத்ததோடு, சுதாவையும் கைது செய்தனர்.