யாழ்.நாவற்குழி வழக்கில் துமிந்த கெப்பிட்டிவெலான யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார்.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கில் நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான இன்று முன்னிலையாகியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகள் ஜனவரி மாதம் 18ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாக இருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதையடுத்தே 1996ம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவத் தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான மன்றில் முன்னிலையாகி உள்ளார்.
1996ம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவத் தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் காணாமல்போயிருந்தனர்.
இந்நிலையில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகளான கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்.மேல்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் நீதிபதி மா.இளஞ்செழியன் இவ்வழக்கின் முதலாம் எதிரியான குறித்த இராணுவ தளபதி துமிந்த கெப்பிட்டிவெலானவை இன்று (ஏப்ரல் 2ஆம் திகதி) மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை தற்போது மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று வருகிறது.