567 பவுண்டுகள் எடையுள்ள குண்டு மனிதரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அவரது எடையைக் குறைக்க காரணமாக அமைந்துள்ளது.
இன்று 241 பவுண்டுகள் எடையுடனும் எக்கச்சக்கமான தன்னம்பிக்கையுடனும் வலம் வரும் கனடாவைச் சேர்ந்த Tony Bussey (43), மூன்றாண்டுகளுக்குப்பின் நடைபெற இருக்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓட இருக்கிறார்.
இந்த மாற்றத்திற்கு காரணமாக அமைந்தது ஒரு விபத்து. 2016 ஆம் ஆண்டு Fort McMurray அருகில் ஏற்பட்ட காட்டுத்தீயின்போது தப்பி ஓடியவர்களில் Tony Busseyயும் ஒருவர்.
உடல் எடை காரணமாக Tony Bussey மெதுவாக நகர, துரதிருஷ்டவசமாக அவருக்கு பின்னால் வந்தவர்களால் வேகமாக தப்பிச் செல்ல இயலவில்லை. தீ விபத்தில் தப்பியவர்களை சம்பவ இடத்திலிருந்து வெளியேற்ற விமானங்கள் கொண்டு வரப்பட்டன.
விமானத்தில் ஏறுவதற்கான நீண்ட வரிசையில் Tony Bussey முதலாவது கொண்டு நிறுத்தப்பட்டார்.
மற்றவர்கள் அவருக்குப் பின்னால் காத்திருக்க, Tony Bussey சற்று அசௌகரியமாக உணர்ந்தார். விமானத்தில் ஏறிய பின்னரும் இவர் எப்போது அமர்வார் என்று மற்றவர்கள் காத்திருந்தார்கள்.
அது போதாதென்று Tony Busseyக்கு விமானத்தில் இரண்டு இருக்கைகள் தேவைப்பட்டது. இதற்காக தான் ஏதாவது செய்யவேண்டும் என்று அன்று முடிவெடுத்தார் Tony Bussey.
வீடு திரும்பியதும் குறைந்த கார்போஹைட்ரேட்டும் அதிக புரதமும் கொண்ட உணவுக்கு மாறினார். நடைப்பயிற்சியைத் தொடங்கினார்.
நம்பினால் நம்புங்கள், Tony அறுவை சிகிச்சை எதுவுமின்றி 326 பவுண்டுகள் எடை குறைத்தார்.
இப்போது கேட்டால், காட்டுத்தீ ஏற்பட்டதன் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளின்போது நடத்தப்பட இருக்கும் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கெடுப்பதே தனது அடுத்த இலக்கு என்கிறார் அவர்.
உடல் எடை காரணமாக பொதுவாக எங்குமே செல்லாத அவர் இனி நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்குமுன் எனது கார்வரை நடக்கக்கூட எனக்கு கஷ்டமாக இருக்கும், எனது காருக்குள் என்னைத் திணித்துக் கொண்டது போல் இருக்கும் என்று கூறும் Tony Bussey, தன்னால் இதைச் செய்ய முடிந்தது என்றால் உங்களாலும் இது முடியும் என்று மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார்.