பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எழுத்துமூலம் முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கூடிய சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களது கூட்டத்தின்போது தயாரிக்கப்பட்ட கடிதமொன்றை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.
அதில், பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு கோரப்பட்டிருந்தது.
எனினும் அந்தக் கோரிக்கையை பிரதமர் அடியோடு நிராகரித்திருப்பதோடு தொடர்ந்தும் தாம் பிரதமர் பதவியில் நீடிக்கப்போவதாக பதிலளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று நாளை நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிப்பதற்கு வருகைதர மறுத்துவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களது விபரங்களையும் பிரதமர் கோரியிருப்பதாக அறியமுடிகின்றது.