பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடுமையாக விவாதித்துள்ளார். அதேவேளை நடுநிலை வகிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சம்பந்தனிடம் கேட்டுக்கொண்டார் என்றும் தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கத்தை சீர்குலைக்க இடமளிக்க வேண்டாம் எனறு சம்பந்தன் வலியுறுத்தினார் என்றும் கூறப்படுகின்றது.
இந்த சந்திப்பு தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அலுவலகமும் அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு கூறினாலும், இருவரும் பேசிய விடயங்கள் முழுமையாக எதுவும் வெளியிடப்படவில்லை.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய நோக்கம் குறித்து சம்பந்தன் விளக்கமளித்தார். அதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னரான அரசியல் சூழலில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்தும் சம்பந்தன் ஆவேசமாக எடுத்துக் கூறியதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால் சிங்கள இனவாதிகள் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சேறுபூசுவார்கள் எனவும் அதனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சம்பந்தன், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளார்.
ஆனாலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சம்பந்தன் கூறியுள்ளார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தமிழ் மக்கள் சார்பான கோரிக்கை ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை கையளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் 15 உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர் எனவும் கூட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன.
பிரேரணைக்கு எதிராகவும், நடுநிலை வகிக்க வேண்டும் என்றும், அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மூன்று வகையான கருத்துக்கள் கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே நிலவியது.
ஆனாலும் சம்பந்தன் இன்று செவ்வாய்க்கிழமை விளக்கமளித்த பின்னர் ஆதரவாக வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.