உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப்பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கு, முக்கிய இடம் அளித்துள்ளது. அதன்படி கடந்த, 2015ம் ஆண்டு முதல் உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது.
கோயமுத்தூரை சேர்ந்தவர் இனியன், பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட இவர், ஆட்டோ டிரைவாக பணியாற்றி வந்தார். அப்போது இட்லி செய்வதில் கைதேர்ந்த பெண்ணிடம் இருந்து, இனியன் இத்தொழிலைக் கற்றுக் கொண்டார். அதன் முயற்சியாக கடந்த 2013-ல், 128 கிலோ எடை கொண்ட இட்லியை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தார்.
அப்போதுதான், தமிழ்நாடு உணவு தயாரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ராஜாமணி அய்யர், இட்லி தினம் கொண்டாடும் திட்டத்தை முன்மொழிந்தார். அப்படித்தான், மார்ச் 30 தேதி என்ற தினம் இட்லி தினமாக அறிவிக்கப்பட்டது.
இந்தோனேஷியாதான் இட்லியின் தாயகம் என்று கருதப்படுகிறது. அதோடு, சீன யாத்ரீகர் யுவான் சுவாங், 7-ம் நூற்றாண்டில் ஆவியில் வேகவைக்கும் பாத்திரமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டியிருப்பதால், இது இந்தியாவின் உணவாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கி.பி.1130-ம் ஆண்டில், மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், மானசொல்லாசா” என்ற நூலில், இட்டாரிகா’ என்று ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார். அது இட்லிதான் என்கிறார்கள். இதுபோக 10-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வந்து குடியேறிய சௌராஷ்டிரர்கள் கொண்டு வந்ததுதான் `இடாடா’ எனப்படும் இட்லி என்பவர்களும் உண்டு.
ஒரு இட்லியில் சராசரியாக 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆவியில் வேக வைத்தல் முறையில் சமைக்கப்படுவதால் இதில் கொழுப்புச்சத்து இருக்காது.
இட்லியில் மட்டுமே ஊறவைத்த அரிசியின் மூலம் கார்போஹைட்ரேட்டும், பருப்பின் மூலம் புரதச்சத்தும் ஒன்றிணைந்து கிடைக்கும்.ரவா இட்லி, சாம்பார் இட்லி, ரச இட்லி, நெய் இட்லி, வெந்தய இட்லி சாம்பார் இட்லி, ஃப்ரைடு இட்லி, மசாலா இட்லி, சில்லி இட்லி, கைமா இட்லி… என இட்லி வகைகள் ஏராளம்.
சினிமாவில் பிரபலமாக்கப்பட்ட, இட்லி உப்புமா’ பல வீடுகளில் வலம் வந்த கதையெல்லாம் இங்கு உண்டு.
உலக அளவில் இட்லி ஒரு சிறந்த, சுவை மிகுந்த காலை உணவு. இப்படி உலகளவில் பெயர்பெற்ற, எளிதில் ஜீரணமடையக்கூடிய உணவான இட்லி தினத்தை அனைவரும் இனி மறக்காமல் கொண்டாடுவோம்.