சென்னையில் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜாவின் கார் ஓட்டுநர் சொகுசு காருடன் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது. தலைமறைவான ஓட்டுநரை போலீசார் தேடி வந்த நிலையில், கார் காணாமல் போகவில்லை என்றும், ஓட்டுநர் தூங்கிவிட்டதாகவும் தெரிவித்ததால் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
இசையமைப்பாளர் இளையராஜாவும் மகனும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். திங்கட்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றுக்காக யுவன் சங்கர் ராஜா மதுரை சென்றுவிட, அவரது மனைவி மட்டும் உறவினர்கள் வீட்டில் இருந்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜாவின் ஆடி ஏ 6 ரக சொகுசு காரை, நவாஸ் கான் சாதிக் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் திங்கட்கிழமை மாலை வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆடிக் காரை காணவில்லை என்றும், ஓட்டுநர் சாதிக் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு காருடன் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறி யுவன் சங்கர் ராஜாவின் உறவினர்கள் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரும் கார் எங்குள்ளது என ஓட்டுநரின் செல்போன் எண்ணை வைத்து தேட ஆரம்பித்தனர். ஓட்டுநர் சாதிக்கின் செல்போன் சிக்னல் கிடைக்காததால், கார் பதிவெண்ணை வைத்து சுங்கச்சாவடிகளுக்கு அனுப்பி விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
திடீரென யுவனின் உறவினர்கள் எழும்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து கார் கிடைத்துவிட்டதாகவும், வீட்டிலேயே இருந்ததாகவும் கூறியதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஓட்டுநர் சாதிக்கிடம் விசாரித்த போது, அவர் சொன்ன தகவலைக் கேட்டு போலீசாருக்கு தலைசுற்ற தொடங்கிவிட்டது.
தூக்கத்திற்காக மாத்திரை எடுத்து கொண்ட ஓட்டுநர், வழக்கமாக நிறுத்தி வைக்கும் இடத்தில் இடம் இல்லாததால், கட்டடத்தின் தரைகீழ்தளத்தில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அங்கேயே தூங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“ஆடு காணாமல் போகவில்லை, காணாமல் போனதாக கனவு கண்டேன்” என்று திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி போல யுவன் சங்கர் ராஜாவின் உறவினர்கள் காவல் துறையினரிடம் தெரிவிக்க நொந்துகொண்டு திரும்பினர் காவல் துறையினர்