இலங்கைப் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக அரசாங்கத்தில் இருந்து கொண்டு யாராவது அமைச்சர்கள் வாக்களித்தால் அவர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஆதரவாக வாக்களிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவர் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் இன்று எதிர்பார்க்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை ஒன்று அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை எனவும், அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சருர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.