ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக் கையில்லாத் தீர்மானம் 46 மேலதிக வாக்கு களால் தோற்கடிக்கப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளதுடன் தலைமை அமைச்சராகத் தொடர்ந்து நீடிப்பார்.
இந்தத் தீர்மா னத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் வாக்களித்தன. கூட்டு எதிர்க்கட்சியும் சுதந்திரக் கட்சியின் 17 பேரும், மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவாக வாக்களித்தன.
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக 122 வாக்குகளும், ஆதரவாக 76 வாக்குகளுக்கு கிடைக்கபெற்றன. நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் நேற்று காலை 9.30 மணியில் இருந்து இரவு 9.30 வரை இடம்பெற்றது.
இதன்போது ஆளும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் கூச்சல் குழப்பத்துடன் கூடிய சூடான விவாதம் நடைபெற்றது.
கடும் பாதுகாப்பு
நாடாளுமன்றம் நேற்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தமையினால் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதனை கருத்திற் கொண்டு நேற்றைய தினம் நாடாளுமன்றம் ஆரம்பிக்க முன்னர் சிறிஜயவர்தனபுர நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கலகம் அடக்கும் பொலிஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
விவாதம் ஆரம்பம்
நாடாளுமன்றம் அமர்வு நேற்று ஆரம்பிக்கப்பட்டபோது வாய்மூல விடைக்கான வினா நேரம் முடிவடைந்த பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கூட்டு எதிரக்கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் தினேஷகுணவர்தன முன்வைத்து உரையாற்றினார். அதனையடுத்து டலஸ் அழகப்பெரும தீர்மானத்தை ஆமோதித்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தை ஆரம்பித்து தினேஷ; குணவர்தன உரையாற்றினார். அதனை தொடர்ந்து கூட்டு எதிர்க்கட்சி சார்பாக சமல் ராஜபக்ச, டலஸ் அழகபெரும, விமல் வீரவன்ச, மகிந்தானந்த அளுத்கமகே, வாசுதேவ நாணயக்கார, சந்திரசிறி கஜதீர, பந்துல குணவர்தன ஆகியோர் உரையாற்றினர்.
ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நவீன் திஸாநாயக்க ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான துஷhர இந்துநில், ஆனந்த அளுத்கமகே, முஜிபுர் ரஹ்மான், அஜித் மான்னபெரும ஆகியோர் உட்பட பலரும் உரையாற்றினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்ந்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் உரையாற்றினர். சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாத்திரமே உரையாற்றினார். மக்கள் விடுதலை முன்னணி சார்பில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் அக்கட்சி தலைவருமான அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிமல் ரத்னநாயக்க ஆகியோர் உரையாற்றினர்.
சிரித்து பேசிய ரணில்
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பித்து தினேஷ; குணவர்தன உரையாற்றிக்கொண்டிருந்த போது ரணில் விக்கிரமசிங்க சபாபீடத்திற்குள் நுழைந்து ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்.
இதனையடுத்து தனது ஆசனத்தில் வந்து அமர்ந்த ரணில் விக்கிரமசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்கவை பார்த்து கிண்டலாக ஏதோகூறினார். அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான லக்ஷ;மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக ஆகியோருடன் சிரித்தப்படி பேசிக்கொண்டிருந்தார்.
கூச்சல், குழப்பம்
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் வாதப்பிரதிவாதங்களுடனும் கூச்சல் குழப்பங்களுடனும் இடம்பெற்றது. தினேஷ; குணவர்தன, விமல் வீரவன்ச, சுசில் பிரேமஜயந்த, வாசுதேவ நாணயக்கார, மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் உரையாற்றுகையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் இடையூறு விளைவித்தமையினால் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் உரையாற்றும் போது கூட்டு எதிர்க்கட்சியினர் கோசமிட்டு எதிர்ப்பு வெளியிட்டனர். இதன்காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாமல் அக்கிராசனத்தில் அமர்ந்த சபாநாயகர் கரு ஜயசூரியவும் குழுக்களில் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சபாநாயகரின் எச்சரிக்கை
நம்பிக்கையில்லாத் தீர்மான மீதான விவாதத்தின் போது ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஒழுங்கு பிரச்சினைகளை எழுப்பி தவறான வார்த்தை பிரயோகங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட விவகாரங்களை பேசிக்கொண்டிருந்தமையினால் சபாநாயகர் கரு ஜயசூரிய கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். தயவு செய்து தேவையற்ற விடயங்களுக்கு ஒழுங்கு பிரச்சினை எழுப்ப வேண்டாம் என்றும் தவாறான பேச்சுகளை பேச வேண்டாம் என சபாநாயகர் எச்சரிக்கை விடுத்தார்.
வாக்கெடுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை கூறி சபைச் செயலர் வாக்கெடுப்பினை நடத்தினார். இதன்பிரகாரம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
சு.கவில் ஒரு பகுதியினர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மகிந்த அணியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்திய சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 22பேர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சுதந்திரக் கட்சிக்குள் மற்றுமொரு பிளவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஏற்கனவே, மைத்திரி அணி, மகிந்த அணி என்று பிளவுபட் டுள்ள நிலையில், ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துடன் மேலும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் மைத்திரி அணியில் இருந்து செயற்பட்ட 22 பேர் அந்த அணியிலிருந்தும், கூட்டு அரசிலிருந்தும் வெளியேறியுள்ளனர்.
அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த இந்த தகவலை தலைமை அமைச்சருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா உள்ளிட்டவர்கள் அரசை விட்டு வெளியேறவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.இதற்கிடையே, ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் வாக்களித்திருந்தனர்.
அமைச்சர்கள் சுசில் பிரேம ஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, எஸ்.பி.திசநாயக்க, தயாசிறி ஜெயசேகர, சுசந்த புஞ்சிநிலமே, சுதர்சனி பெர்னான்டோ புள்ளே, ஜோன் செனிவிரத்ன, சந்திம வீரக்கொடி, டிலான் பெரேரா ஆகியோரே, இவ்வாறு வாக்களித்தனர்.
இதேவேளை, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் சுதந்திரக் கட்சி பங்கேற்காது என்று நேற்றுக் காலை இராஜாங்க அமைச்சர் எச்.எம்.பௌசி தெரிவித்திருந்தார். அவர் அறிவித்து ஒரு மணி நேரத்தினுள்ளேயே, அதனை மறுத்து லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்போம் என்று அறிவித்திருந்தார்.
நம்பிக்கையில்லாத் தீர்மான விடயத்தால் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளமையே இது எடுத்துக் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தன், டக்ளஸூம் ரணிலுக்கு ஆதரவு
ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர், ரணிலுக்கு ஆதரவாக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது நேற்று இரவு பெயர் கூவி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவா ? இல்லையா ? என்று கேட்கப்பட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா ஆகியோர் ‘இல்லை’ என்று தெரிவித்து, நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பினர், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை கடந்த திங்கட் கிழமை தனித்துச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மக்கள் ஆணையை மீறவே வேண்டாம்
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பிப் பொருளாதார, சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் 2015இல் மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கு மகிந்த தலைமையிலான சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று அழைப்பு விடுத்தார்.
‘தலைமை அமைச்சர் ரணில் விக்கிரசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசியல் நோக்கம் கொண்டது. அதில் உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியின் அடுத்த இலக்கு மைத்திரியே. அரசியல் நோக்கம்கொண்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது’ என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இங்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஊழல் என்பது இந்த நாட்டைப் பீடித்துள்ள மிகமோசமான நோயாக இருக்கின்றது. அந்த நோய் முழுமையாகக் களையப்படவேண்டும். ஊழலின் ஆணிவேர் அடியோடு ஒழிக்கப்படவேண்டும்.
ஊழல் சம்பந்தமான முறைப்பாடுகள் முழுமையாக விசாரிக்கப்படவேண்டும். குற்றவாளிகளாக இனங்காணப்படுபவர்களுக்கு உச்சபட்ச தண்டனைகள் வழங்கப்படவேண்டும். இதில் எந்தவொரு விட்டுக்கொடுப்பும் இருக்கக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாடும் இதுவாகத்தான் இருக்கின்றது.
அரசியல் நோக்கம் கொண்ட பிரேரணை
மத்திய வங்கி விவகாரத்தை மையப்படுத்தியே ரணிலுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நேரம் குறித்துச் சிந்திக்கவேண்டும். இதில் அரசியல் பின்னணி இருப்பதாக உணர்கிறேன். பொறுப்புக்கூறவேண்டியவர்கள் யாரெனப் பாராது ரணிலைச் சாடுவதாகவே தீர்மானம் அமைந்துள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள காரணங்களில் முரண்பாடுகள் இருக்கின்றன. ரணிலுக்கு எதிரான ஆதாரங்கள் எங்கே? அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறுவதற்கு எந்தவொரு பலமான சாட்சியும் இல்லை. இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் ரணிலுக்கு எதிரானதா அல்லது அரசை கவிழ்ப்பதற்கான முதல் முயற்சியா?
அரசியல் தீர்வு
புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும். பொருளாதாரத்தை முன்னேற்றவேண்டும். மக்களுக்குச் சிறப்பான வாழ்வு அமையவேண்டும். வீணாக்குதலை அடியோடு அழிக்கவேண்டும் எனக் குரல்கள் எழுப்பப்பட்டன.
இவற்றை மையப்படுத்தியே அரச தலைவர் தேர்தலின்போதும், நாடாளுமன்றத் தேர்தலின்போதும் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு மக்களின் ஆணையும் வழங்கப்பட்டது. அரச தலைவர், தலைமை அமைச்சர் ஆகியோர் ஜனநாயக முறைப்படி மக்களின் ஆணையின் பிரகாரம் தெரிவுசெய்யப்பட்டனர்.
கடந்த காலங்களில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு முயற்சிக்கப்பட்டபோதும் அந்த முயற்சிகள் கைகூடவில்லை. இதனால்தான் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கின.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் பொதுமக்கள் முன்னணி என்ற புதிய கட்சியொன்று வளர்ச்சி பெற்றது. அரசின் பயணத்துக்குப் பெரும் தடங்கலாக இந்த அணி இருக்கின்றது. ரணிலை வீழ்த்த வேண்டும், அரசைக் கவிழ்க்க வேண்டும் என்பதே இவர்களின் இலக்காக இருக்கின்றது.
இதைவிடுத்து மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதற்கு அரச தலைவர் மைத்திரிக்கும், தலைமை அமைச்சர் ரணிலுக்கும் ஆதரவு வழங்கவேண்டும். அதற்கான ஒத்துழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்பாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராகவும் செயற்படுகின்றது எனப் பரப்புரை முன்னெடுக்கப்படுகின்றது. இது தவறான விடயம். மக்களின் ஆணையின் பக்கமே நாம் இருக்கின்றோம்.
1994இல் சந்திரிகா ஆட்சியின்போது நாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆரவளித்தோம். அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறிக்கும் தீர்மானத்துக்கு எதிராகக் குரல் எழுப்பினோம் என்பதைக் கூறிவைக்கின்றோம்.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக அரசமைப்பு நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டது. இலங்கையின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு மக்களின் ஆணைக்கு எதிராக செயற்படவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினர்களாக சமல் ராஜபக்ச, தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும ஆகியோர் இருக்கின்றீர்கள். ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண முன்வாருங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றோம் -– என்றார்.
மகிந்தவும் வாக்களித்தார்
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சமர்ப்பித்த மகிந்த அணியின் தலைவர், முன்னாள் அரச தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தார்.
இதேவேளை, பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாருக்கு வாக்களிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரணிலுக்கு ஆதரவாகவே அவர் வாக்களித்தார்.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் மேசையில் தட்டி ஆதரவு தெரிவித்தனர். ஐக்கிய தேசிய முன்னணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு உறுப்பினரான அத்துரலிய ரத்ன தேரர், வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியில் தலைமை அமைச்சருக்கு எதிராக குரல் கொடுத்த பாலித ரங்கே பண்டார மற்றும் வசந்த சேனநாயக்க ஆகியோர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மீதமாகவுள்ள காலத்திலாவது மக்கள் ஆணையை நிறைவேற்றுக
அரசுக்கு வழங்கிய ஆதரவு தொடர்பில் நாம் தெளிவாக உள்ளோம். ஆனால், அரசின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டவர்களாக உள்ளோம். எஞ்சியுள்ள இரண்டு ஆண்டுகள் காலத்திலாவது மக்கள் ஆணையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான கால அவகாசத்தை நாங்கள் தருகின்றோம். இதுவரை கூறப்பட்ட காரணங்களைக் கூறாமல் அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இனரீதியான பதற்றம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றிபெறக் கூடாது என்று மைத்திரி கூறியிருப்பதாக வதந்திகள் பரவியுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க சுட்டிக்காட்டினார்.
இதுவும் இன ரீதியான நோக்கத்தில் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பெயரைக் குறிப்பிட்டு கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இது இன ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களாகும்.
சிங்கள – பௌத்தத்தால் விமோசனம் கிடையாது
நம்பிக்கையில்லத் தீர்மானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? ஏன் தமிழ் மக்களுக்கு இவ்வாறான செயற்பாடுகளில் பங்கெடுப்பதற்கு ஜனநாயக உரிமை இல்லையா? மைத்திரி, அப்படிக் கூறியிருந்தால் இந்தக் கேள்வியை அவரிடம் முன்வைக்கின்றேன். நீங்கள் மாத்திரம் தமிழ் மக்களின் வாக்குகளுடன் வெற்றிபெறலாம், ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரம் பெற்றிபெற முடியாதா என்று மைத்திரியிடம் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் கேட்டதாகவும் அந்த வதந்தியில் சொல்லப்படுகிறது.
மைத்திரி அப்படிச் சொல்லியிருக்கமாட்டார் என்று நம்புகின்றேன். சகல விடயங்களும் சிங்கள மற்றும் பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கப்படுமாயின் நாட்டுக்கு விமோசனம் கிடையாது.
இனவாதப் போக்கு
கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு தவறிவிட்டதாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற ரீதியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்களவர் மற்றும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு எனக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் முஸ்லிம் மக்கள் பாதுகாக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் கூற விரும்பவில்லை என்பதாலேயே சிங்களவர்கள் மற்றும் தமிழர்களையும் குறிப்பிட்டுள்ளனர். நிச்சயமாக முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக இருக்கும் நிலையில் இனரீதியான நோக்கத்துடன் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் கையொப்பம் இட்ட காதர் மஸ்தான் உட்பட அனைவரினதும் இனவாதப் போக்கு வெளிப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்பு
அடிப்படைச் சட்டமான அரசமைப்பு சகலராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக தயாரிக்கப்படவேண்டும். இது சகல மக்களின் இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்படுவதுடன், பொது வாக்கெடுப்புக்கும் உட்படுத்தப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்தி வருகின்றோம். 76 தடவைகள் வழிநடத்தல் குழு கூடி அரசமைப்புத் தயாரிப்பு பற்றி ஆராய்ந்துள்ளது. இந்த செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
மூன்று மாதத்துக்குள் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்று ரணில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதியளித்திருப்பதாக விமல் வீரவன்ச சில நிமிடங்களுக்கு முன்னர் கூறினார். அப்படி உறுதிமொழி வழங்குவதில் என்ன தவறு உள்ளது. அரசமைப்பை உருவாக்கும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றம் ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ள நிலையில் ரணில் அப்படியான உறுதிமொழி வழங்குவதில் என்ன தவறு உள்ளது? மூன்று மாதத்துக்குள் அரசமைப்பு நிறைவேற்றப்படுமாயின் அது தொடர்பில் நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.
அரசு மீது அதிருப்தி
நாம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றோம். கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் செயற்பாடுகளில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அரசின் பாதை தொடர்பில் பிரச்சினையில்லாவிட்டாலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் பல விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை. அரசு பயணிக்கும் பாதை சற்று மாறியுள்ளபோதும், முன்நோக்கி நகர்ந்து வருகிறது. மிகவும் மெதுவாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் அது தெரிவதில்லை.
அரசியல் கைதிகள்
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் இழுபட்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பலர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் ஆகியுள்ளன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளப்பெற்று புதிய சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசு உறுதியளித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் கலகத்துடன் தொடர்புடையவர்களுககு மன்னிப்பு வழங்க முடியும் என்றால் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஏன் மன்னிப்பு வழங்க முடியாது? அரசியல் நோக்கத்துக்காகப் போராடியதால் மக்கள் விடுதலை முன்னணியினருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளும் அரசியல் நோக்கத்தை அடைவதற்காகவே போராடினார்கள்.
வடக்கில் நிலமை மோசம்
காணிகளை விடுவிப்பதாக மைத்திரி உறுதிமொழிகளை வழங்கியிருந்த போதும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. மக்களின் காணிகளில் இராணுவத்தைக் கொண்டு அரசு விவசாய பண்ணைகளையும் முன்பள்ளிகளையும் நடத்துகின்றது.
இது மாத்திரமன்றி வடக்கு, கிழக்குக்குத் தென்பகுதியிலிருந்து பலர் நியமிக்கப்படுகின்றனர். குறிப்பாக சிறு சிறு பதவிகளுக்கு கூடச் சிங்களம் பேசும் நபர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ்ப் பேசும் மக்கள் 100 சதவீதம் வாழும் பகுதிகளில் தமிழ் பேச தெரியாதவர்களை ஏன் நியமிக்கின்றீர்கள் ? யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் பணிபுரியும் ஆறு வாகனச் சாரதிகள் காலியிருந்து வந்துள்ளனர்.
குளியாப்பிட்டிய பகுதியில் தேங்காய் பறித்தவர்களை வடக்கில் அலுவலக உதவியாளர்களாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாகவும் நியமித்துள்ளார்கள். தேங்காய் பறிக்க யாரும் இல்லாமல் போனதால் தான் தற்போது தேங்காய் விலை அதிகரித்து இருக்கலாம். எமக்குத் தண்ணீர் வேண்டும். தண்ணீரை மட்டும் கொண்டு வாருங்கள்;. தெற்கிலிருந்து மக்களை அங்கு அழைத்து வர வேண்டாம் -– என்றார்.
ரவிராஜ் எப்படி கொல்லப்பட்டார்?
மகிந்த ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை, சிறைச்சாலைப் படுகொலைகள், ஊடகவியலாளர்கள் கொலைகள் என்பன யாரால், எவ்வாறு நடத்தப்பட்டன என்பது குறித்து எனக்குத் தெரியும். அதனை சபையில் சொல்லப் போவதில்லை. இவ்வாறு அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார்.
ரணிலைத் துரத்திவிட்டு இந்த அரசைக் கவிழ்க்கும் கனவிலிருக்க வேண்டாம் என்றும் பொது எதிரணியினருக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
‘உங்களது எதிர்கால அரச தலைவர் வேட்பாளரும், அமெரிக்க குடிமகனுமான கோத்தாவுக்கே இந்த நாட்டின் அரச தலைவர் பதவியை வழங்க ஆசைப்படுகின்றீர்கள்’ என்றும் பொது எதிரணியினரைப் பார்த்து அவர் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ரணில் விக்கிரமசிங்க மீது எமக்கு நம்பிக்கையுள்ளது. 24 மணிநேரத்தில் 18 மணிநேரம் உழைக்கக் கூடியவர் அவர்.
கடனில் இருந்த நாட்டைப் பொறுப்பேற்று முன்னேற்றுவதற்காக நாம் பாடுபடுகின்றோம். கண்டி சம்பவத்தின் முழுப் பொறுப்பையும் ரணில் மீது சுமத்த முடியாது.
அவன்கார்ட் மூலம் மாத்திரம் கோத்தபாய 11 பில்லியன் ரூபாவைக் கொள்ளையடித்தார். ரஞ்சித் சொய்சா திருடி விட்டே நாடாளுமன்றத்து வந்தார்.
கடந்த மகிந்த ஆட்சியில் போர் செய்த இராணுவத் தளபதி சிறையில் அடைக்கப்பட்டார். 10 ஜெனரல்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
பிணைமுறி விவகாரத்தில் தலைமை அமைச்சர் மீது குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை – என்றார்.
கூட்டமைப்பின் கட்டளைகளை செயற்படுத்த ரணில் எழுத்து மூலம் உறுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பால், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்கவை ஆதரிப்பதற்கு விதிக்கப்பட்ட 10 நிபந்தனைகளையும் செயற்படுத்துவதாக, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க எழுத்துமூலம் உறுதியளித்துள்ளார்.
தலைமை அமைச்சரினால் வழங்கப்பட்ட கடிதத்தை, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்றுக் காண்பித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்;டம் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போதே மேற்படி கடிதம் காண்பிக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் ஆராயப்பட்டது. காரசாரமான விவாதம் நடைபெற்றது. தலைமை அமைச்சரையும் நேரில் சந்தித்துக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சு நடத்தியிருந்தனர்.
இந்தப் பேச்சுக்களின்போது, 10 நிபந்தனைகள் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொள்வதாக ரணில் எழுத்துமூலம் உறுதியளிக்கவேண்டும் என்று கோரியிருந்தனர். அதனைச் செயற்படுத்தவே ரணில் இணக்கம் தெரிவித்து எழுத்துமூலம் பதிலளித்துள்ளார்.
கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்,
புதிய அரசமைப்பு முயற்சியை எதிர்வரும் தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் மீண்டும் ஆரம்பித்தல்.
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் பிரதேசத்தில் படைகள் வசம் தொடர்ந்ம் உள்ள நிலப்பரப்புக்களை விடுவித்தல்.
இதேகாலத்தில் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்தல். பயங்கரவாத தடைச் சட்டம் மீளப் பெறப்படவேண்டும்.
காணாமல்போனோரின் உறவுகள் கடந்த ஓராண்டாக வீதியில் உள்ள நிலையில் காணாமல்போனோர் செயலகம் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த உருப்படியான முன்னேற்றமும் இல்லாதமையினால் அதற்கான பொறுப்புக்கூறலுடன் உரிய தீர்வினைக் கூறுதல். வடக்கு – கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் கிளைகள் அமைத்தல்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் தொழில் முயற்சி என்னும் பெயரில் குடியேற்ற முயற்சியோடு அந்தப் பகுதி மக்களின் உரிமை மறுக்கப்படுவது தொடர்பில் நீண்டகாலமாகச் சுட்டிக்காட்டும் விடயத்திற்கு உரிய தீர்வு வழங்குதல்.
வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பின்றியுள்ள நிலையில் விசேடமாக வேலைவாய்ப்பு வழங்கி அதற்கான தீர்வை வழங்குவதோடு வடக்கு கிழக்கு பகுதிக்குத் தெற்கில் இருந்து நியமனம் வழங்குவதனை நிறுத்துதல்.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் 8 மாவட்டங்களிற்கும் தமிழ் அரச அதிபரை நியமித்தல்.
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் திட்டங்கள் அபிவிருத்திகளின்போது மாகாண அரசின் கொள்கைகள் திட்டங்களிற்கு முன்னுரிமை அளிப்பதோடு திட்டத்தயாரிப்பின்போதே மாகாண சபையின் கருத்தைப் பெறுதல்.