21 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது பதக்கமாக வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் சதுரங்க லக்மால்.
ஆரம்ப தினமான இன்று (05) இலங்கை சார்பில், ஆண்களுக்கான 56 கிலோ கிராம் பிரிவு பளு தூக்கும் போட்டியில் பங்குபற்றிய கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான சதுரங்க லக்மால் 248 கிலோ கிராம் நிறையை தூக்கியதன் மூலம் இப்பதக்கத்தை பெற்றுக் கொண்டார் என்பதோடு ஒரு கிலோ கிராமினால் வெள்ளி பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு தவற விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவருடன் போட்டியிட்ட மலேசிய வீரர் இஷார் அஹ்மத் 261 கிலோ கிராம் நிறையையும், இந்திய வீரர் குருராஜா 249 கிலோ கிராம் நிறையையும் தூக்கி முறையே தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
71 நாடுகள் பங்கேற்கும் பொதுநலவாய விளையாட்டு போட்டி அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் இன்று ஆரம்பமாகியது.
இப்போட்டிகளில் இது வரை 06 பதக்கங்கள் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.
பேர்முடா, மலேசியா ஆகியன தலா ஒரு தங்க பதக்கத்தையும் இங்கிலாந்து, இந்தியா தலா ஒரே வெள்ளி பதக்கத்தையும் கனடா மற்றும் இலங்கை தலா ஒவ்வொரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.