நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் தோல்விக்கு காரணம் இந்த நாட்டின் சிறுபான்மையினரின் ஏகோபித்த ஒற்றுமையே என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மாணம் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டிருந்தன.
இது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது வாத பிரதி வாதங்களை முன் வைத்தனர் இருந்தும் இருதியில், 122 பேர் எதிராக வாக்களித்து நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வி அடையச் செய்தனர்.
குறிப்பாக சிறுபான்மை கட்சிகளான மலையகத்தில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி உட்பட முஸ்லிம் கட்சிகளும் இணைந்து வாக்களித்து உள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை இதையும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக கருதுகின்றேன்.
ஒட்டுமொத்தத்தில் இலங்கையின் சிறுபான்மை கட்சிகள் யாவும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டுள்ளன. இதை உணர்ந்து எதிர்காலத்தில் செயற்பட்டு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வுகான வேண்டும்.
குறிப்பாக 30 வருட கொடூர யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள இன பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும். இதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.
சிறுபான்மை கட்சிகளும் தலைவர்களும் இதை சரியாக பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும், இந்த நாட்டில் எந்த ஒரு அரசாங்கமும் தனது ஆட்சியை அமைக்க வேண்டுமானாலும் அல்லது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானாலும் சிறுபான்மை மக்களின் ஆதரவு கட்டாயம் தேவை என்பதை மேற்படி விடயம் உணர்த்தி நிற்கின்றது.
பிரமருக்கு எதிராக பல நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவை நிரூபிக்கப்படவில்லை, இருந்தும் முன்னைய ஆட்சி காலத்தில் நடைபெற்ற நிதி மோசடிகள் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாத பிரதிவாதங்களில் காணக் கூடியதாக இருந்தது.
இதனுடன் ஒப்பிடுகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எவ்வளவோ நேர்மையானவர் என தெரிய வருகின்றது. இந்த நாட்டுக்கும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கும் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியே சிறந்தது. இவரின் ஆட்சி காலத்திலேயே சிறுபான்மை மக்களுக்கு நன்மை கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது.
இதை உணர்ந்து சிறுபான்மையினராகிய நாங்கள் செயற்பட்டு எமது இலக்கை அடைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.