ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால ஐபோன்களில் வழங்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால ஐபோன்களில் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் எனும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் புதிய ஐபோன்களில் வளைந்த திரைகளை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
டச்லெஸ் ஜெஸ்ட்யூர் தொழில்நுட்பம் பயனர்கள் ஐபோனினை தொடாமலேயே அவற்றை இயக்க வழி செய்யும். ஐபோன்களில் இதனை வழங்க ஆப்பிள் முடிவு செய்தாலும் இத்தகைய தொழில்நுட்பம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு வெளியாகாது என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த மவுஸ் சாதனத்தை பிரபலப்படுத்தினார். சமீபத்திய ஐபோன்களில் 3டி டச் தொழில்நுட்பம் புதிய வசதிகளை வழங்கி வரும் நிலையில் புதிய தொழில்நுட்பமும் ஆப்பிள் வரலாற்று அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் உருவாக்கி வரும் புதிய ஐபோன் டிஸ்ப்ளேக்கள் திரையின் மேல்புறத்தில் இருந்து உள்புறமாக வளையும் தன்மை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போதைய சாம்சங் ஸ்மார்ட்போன்களை விட வித்தியாசமானதாகும். ஐபோன் X மாடலின் OLED ஸ்கிரீன் கீழ்புறமாக வளைந்திருந்தாலும், இது மனித கண்களுக்கு தெரியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐபோன்களில் பயன்படுத்தப்படும் வளையும் தன்மை கொண்ட எல்சிடி ஸ்கிரீன்களை விட OLED (ஆர்கானிக் லைட் எமிட்டிங் டையோடு) ரக டிஸ்ப்ளேக்களை பலவித வடிவங்கலில் வளைக்கவோ அல்லது மடிக்கவோ முடியும். வளையும் தன்மை கொண்ட ஐபோன்கள் வெளியாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரையாகும் என கூறப்படுகிறது.