ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டிருப்பது, இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2008ஆம் ஆண்டு மே 22ஆம் நாள் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் புலத்வத்த உள்ளிட்ட 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார்.
சிறிலங்கா இராணுவ மருத்துவமனையில் உள்நோயாளியாகத் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை எதிர்வரும் 18 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கல்கிசை மேலதிக உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவமனைக்குச் சென்று நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அதேவேளை, கீத் நொயார் கடத்தல் வழக்கு மாத்திரமன்றி, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை உள்ளிட்ட பல தாக்குதல் சம்பவங்களிலும் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, தொடர்புபட்டதாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பது, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக இருக்கும் என்று சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.<