பூமிக்கு வெளியே விண்வெளியில் ”அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன்” என்ற சொகுசு ஹோட்டல் மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்படவுள்ளது. ”ஓரியன் ஸ்பேன்” என்ற புதிய ஸ்பேஸ் நிறுவனம் இந்த திட்டத்தை கையிலெடுத்துள்ளது.
இன்றில் இருந்து இதற்கான பணிகள் தொடங்கும். 2021ல் கட்டுமான பணிகள் மொத்தமாக முடிந்து, 2022ல் மக்கள் இந்த ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பூமியில் இருந்து தக்க பயிற்சி கொடுக்கப்பட்ட பின் மனிதர்கள் இந்த ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் இயங்கும் ராக்கெட் வடிவமைக்கப்படும் என்று அந்நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரி பிராங்க் பங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன் பெரிய ஜெட் ராக்கெட் போல இருக்கும். இதன் நீளம் 43.5 அடியும், அகலம் 14.1 அடியும் இருக்கும். இதன் கொள்ளளவு 5,650 கன அடி இருக்கும்.
இது மக்கள் தங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அமைக்கப்பட உள்ளது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் ”ஓரியன் ஸ்பேன்” நிறுவனத்தின் அலுவலகமும் கட்டப்படும்.
இதில் 20 பேர் வரை ஒரே சமயத்தில் தங்க முடியும். இதில் படங்களில் காட்டுவது போல மிதந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண பூமியில் இருக்கும் பகுதி போலவே இதில் செயற்கை புவியீர்ப்பு விசை உருவாக்கப்பட்டு இருக்கும். இதனால் இங்கு தங்கும் நபர்களுக்கு பெரிய அளவில் பயிற்சி தேவை இல்லை.
பூமியில் இருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டப்பவுள்ளது. இவ்வளவு தூரத்தில் இதுவரை ஒரு ஹோட்டல் கட்டப்பட்டது இல்லை. இதற்கான புக்கிங் எப்போது தொடங்கும் என்றும், இதற்கான செலவு எவ்வளவு என்று கூறப்படவில்லை.
இதற்கான கட்டுமான செலவு எவ்வளவு என்று கூறப்படவில்லை என்றாலும், அதில் தங்குவதற்கு வாடகை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
12 நாட்கள் இந்த ஹோட்டலில் தங்க இந்திய மதிப்பில் 61 கோடி ரூபாய் செலவு ஆகும். ஒரு நாளுக்கு 5 கோடி ரூபாய் வரை செலவு ஆகும்.
மற்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு அழைத்து செல்ல வாங்கும் தொகையை விட குறைவு என்று கூறப்படுகிறது.