11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் கோதாவில் இறங்குகின்றன.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களுக்குள் ‘உள்ளூர்-வெளியூர்’ அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.
வெற்றிகரமான அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், சூதாட்ட பிரச்சினையால் 2 ஆண்டுகள் தடை நடவடிக்கைக்குள்ளானது. இதனால் 2016, 2017-ம் ஆண்டுகளில் விளையாட முடியவில்லை. இந்த நிலையில் தடை காலம் முடிந்து மறுபிரவேசம் செய்துள்ள சென்னை அணிக்கு மீண்டும் டோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, வெய்ன் பிராவோ, பாப் டு பிளிஸ்சிஸ், ரவீந்திர ஜடேஜா என்று முன்பு ஆடிய வீரர்கள் மறுபடியும் மஞ்சள் நிற உடையில் அடியெடுத்து வைக்கிறார்கள்.
அனுபவம் வாய்ந்த டோனி, முன்பு போல் அதிரடி காட்ட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். இதனால் அவர் முன்வரிசையில் ஆடுவார் என்று தெரிகிறது. ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (413 விக்கெட்) வீழ்த்தியவரான வெய்ன் பிராவோவைத் தான் சென்னை அணி பந்து வீச்சில் அதிகமாக சார்ந்து இருக்கிறது.
ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் குறைந்தது ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டிய ஒரே அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011-ம் ஆண்டுகளில் மகுடம் சூடியது. இதே பெருமையை தக்கவைக்க வேண்டும் என்பதில் சென்னை அணி தீவிரமாக இருக்கிறது. ஆனால் அணியில் 11 வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள் என்பதால் அவர்களால் முழு தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? என்று பரவலான விமர்சனங்களும் எழுந்துள்ளது. ‘ஓல்டு இஸ் கோல்டு’ என்பதை நிரூபித்து காட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2013, 2015, 2017-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி, பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கேப்டன் ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குணால் பாண்ட்யா, இறுதிகட்டத்தில் மிரட்டலாக பந்து வீசக்கூடிய ஜஸ்பிரித் பும்ரா, முஸ்தாபிஜூர் ரகுமான் உள்ளிட்டோர் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள். சொந்த ஊரில் ஆடுவது மும்பை அணிக்கு சாதகமான அம்சமாகும். ஆனால் பொதுவாக மும்பை அணி தடுமாற்றத்துடன் தொடங்கியே எழுச்சி பெறுகிறது. கடைசியாக ஆடிய 5 சீசன்களில் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியே சந்தித்து இருக்கிறது. இந்த முறை அந்த நிலைமையை மாற்ற வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பார்கள்.
இவ்விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 10-ல் சென்னையும், 12-ல் மும்பையும் வெற்றி கண்டுள்ளது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இவ்விரு அணிகளும் 7 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. இதில் 5-ல் மும்பை அணியும், 2-ல் சென்னையும் வெற்றி பெற்று இருக்கிறது.
மொத்தத்தில் இரு அணிகளும் சரிசமபலத்துடன் மல்லுகட்டுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
இந்த ஐ.பி.எல். தொடரில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் முதல்முறையாக அறிமுகம் ஆவது சுவாரஸ்யமான அம்சமாக இருக்கும். ஒரு இன்னிங்சில் இரு அணியும் தலா ஒரு முறை அப்பீல் செய்யலாம். அப்பீல் வெற்றிகரமாக அமைந்தால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன் அல்லது பாப் டு பிளிஸ்சிஸ், முரளிவிஜய், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ் அல்லது அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங் அல்லது கரண் ஷர்மா, ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர், நிகிடி அல்லது மார்க்வுட்.
மும்பை இந்தியன்ஸ்: இவின் லீவிஸ், இஷான் கிஷன், ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் அல்லது சவுரப் திவாரி, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, மெக்லெனஹான் அல்லது கம்மின்ஸ் அல்லது முஸ்தாபிஜூர் ரகுமான், பும்ரா, டுமினி அல்லது அகிலா தனஞ்ஜெயா, ராகுல் சாஹர் அல்லது பிரதீப் சாங்வான்.
இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. குறிப்பிட்ட சில ஐ.பி.எல். ஆட்டங்களை தூர்தர்ஷனும் ஒளிபரப்பு செய்கிறது. ஆனால் தூர்தர்ஷனில் ஒரு மணி நேரம் தாமதமாக ஒளிபரப்பப்படும். இந்த வகையிலேயே தூர்தர்ஷன், ஸ்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.