வவுனியா நகரசபை மைதானம் பயன்படுத்தமுடியாத நிலையில் காணப்படுவதாக விளையாட்டு வீரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:
வவுனியா நகரசபை மைதானம் சேதமடையும் வகையில் களியாட்ட நிகழ்வுகளுக்காக கடந்த நகரசபை ஆட்சிக்காலத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த போதும் அண்மைக்காலமாக பல்வேறான கேளிக்கை நிகழ்வுகளுக்கு மைதானம் வழங்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயத்திற்கான மாபெரும் கிரிக்கட் போட்டி இன்று (08-04-2018) ஞாயிற்றுக்கிழமை காலை நடத்துவதற்காக விளையாட்டுக்கழகங்கள் குறித்த கழகங்கள் கடந்த சில வாரங்களிற்கு முன் பணம் கட்டி மைதானத்தை பெற்றிருந்தனர்.
எனினும் புதுவருட கொண்டாட்டம் என்ற ரீதியில் இராணுவத்தினரும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து குறித்த மைதானத்தை சூழ கொட்டகைகள் அமைத்ததோடு மைதானத்திற்குள் உழவு இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் கொண்டு செல்கின்றனர்.
மழையுடன் கூடிய காலநிலை வவுனியாவில் காணப்படும் நிலையில் குறித்த மைதானத்திற்குள் வாகனங்களை கொண்டு செல்வதானது பல இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மைதானத்தை வயலுக்கு ஒப்பானதாக மாற்றிவருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதேவேளை மாவட்ட செயலகத்திலும் பிரதேச செயலகத்திலும் பல விளையாட்டு உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்ற போதும் விளையாட்டு நலன் சார்ந்தும் விளையாட்டு வீரர்கள் சார்ந்து சிந்திக்காத நிலையில் அவர்களும் சேர்ந்தே நகரசபை மைதானத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.