பாரிய எதிர்பார்ப்புகள் மிக்க 11 ஆவது ஐ.பி.எல் தொடரில் இலங்கை அணியின் முன்னாள்தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான குமார் சங்கக்கார வர்ணனையாளராக செயற்படவுள்ளார்.
கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள ஐ.பி.எல் தொடரின் ஒளிபரப்பு உரிமையினை ஸ்டார் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போட்டிகளின் வர்ணனையாளர்களின் குழுவை குறித்த நிறுவனம் நேற்று அறிவித்தது.
அந்தக் குழுவில் சங்கக்கார முதல் தடவையாக ஐ.பி.எல் வர்ணனையாளராக பணியாற்றவுள்ளதாக ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களான கெவின் பீட்டர்சன், மைக்கெல் வோகன் மற்றும் நசார் ஹுசைன் ஆகியோரும் வர்ணனையாளர்களாக செயற்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான சங்கக்கார ஐ.பி.எல் வரலாற்றில் 5 போட்டித் தொடர்களில் விளையாடியுள்ளதோடு, 62 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி, 10 அரைச் சதங்களுடன் 1567 ஓட்டங்களையும் குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.