குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து ஒடிசா மாநிலம் பூரி நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்று கொண்டு இருந்தது. நேற்று இரவு இந்த ரெயில் புவனேஸ்வரில் இருந்து 380 கி.மீ. தொலைவில் உள்ள தித்லகார் ரெயில் நிலையம் வந்து நின்றது.
அங்கு வேறு என்ஜினை மாற்றுவதற்காக ரெயில் பெட்டிகளில் இருந்து என்ஜின் கழற்றிவிடப்பட்டது. அப்போது ரெயில் பெட்டிகளின் பிரேக் சரியாக இணைக்கப்படாமல் இருந்ததால் திடீர் என்று பெட்டிகள் அனைத்தும் பின்னோக்கி வேறு திசையில் நகர ஆரம்பித்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கற்களைப்போட்டு ரெயிலை நிறுத்த முயன்றனர். ஆனால் ரெயில் கற்களை உடைத்துக் கொண்டு ஓடியது. அது தாழ்வான பகுதி என்பதால் ரெயிலை நிறுத்த முடியவில்லை.
கடைசியாக அந்த ரெயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தூரம் வரை மெதுவாக ஓடி கேசிங்கா என்ற இடத்தில் தானாகவே நின்றது. என்ஜின் இல்லாமல் ரெயில் வருவது பற்றி இடையில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர். இதனால் அந்தப் பாதையில் மற்ற ரெயில்கள் வராமல் திருப்பி விடப்பட்டன. இதனால் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
திட்கலகாரில் இருந்து கேசிங்கை வரை உள்ள தண்டவாளம் தாழ்வான பகுதி என்பதாலும் ரெயில் பெட்டிகளில் பிரேக் போடப்படாமல் இருந்ததாலும் ரெயில் தானாகவே ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக ரெயில்வே ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.