சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.
இதற்கிடையே, கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 80-க்கும் அதிகமானோர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்துள்ளது.
சிரியாவின் இந்த தாக்குதலுக்கு அதிபர் பஷர் அல் ஆசாத் மிகப்பெரிய விலையை தரவேண்டி இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துளார்.
இந்நிலையில், சிரியா நாட்டில் ரசாயன தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
சிரியா அரசு நடத்திய ரசாயன தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சுவீடன், போலந்து, நெதர்லாந்து, குவைத், பெரு மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.