சிறுநீரில் கல் உருவாவதற்கு இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்றவற்றை காரணங்களாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சிறுநீரில் உண்டாகும் கற்களில் கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கியவைகளே அதிகம் காணப்படுகின்றன. யூரிக் அமிலம் ரத்தத்தில் 6 மில்லி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி குறைபாடுகள் சிலவற்றால் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் கால்சியம் கலந்த மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரித்து விடுகிறது.
40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த நோய் வரலாம். பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.
அறிகுறிகள்: சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது இடுப்பைச் சுற்றி தாங்கமுடியாத வலி ஏற்பட்டு, கடுமையான வியர்வை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.
சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து, எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறும். அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். சிறுநீரகப்பையில் கற்கல் சேராமல் தடுக்க, அதிகமான பழங்கள், காய்கறி, பருப்பு உட்கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
மாதுளை, சப்போட்டா, பெருநெல்லி, கறுப்பு திராட்சை, உலர் கறுப்பு திராட்சை, அனைத்துச் சிட்ரஸ் வகைப் பழங்கள் உதவியாக இருக்கும். கொள்ளு சாப்பிடுவதும் நல்லது. பழங்களை வேகவைத்த தண்ணீர் சாப்பிடுவது, நெருஞ்சி முள், முக்குராட்டை கீரை, பார்லி தண்ணீர் குடிப்பது உதவியாக இருக்கும். முருங்கை வேர் கஷாயம் மற்றும் ஆரோட் கஞ்சி ஆகியன பயனளிக்கும்.
இளநீருடன் (200 மி.லி.) சிறிது ஏலக்காய் சேர்த்துத் தினசரிக் குடித்துவந்தால் கல் கரையும். பெருநெல்லி சாற்றைத் தேனுடன் சேர்த்துத் தினசரிக் காலை சாப்பிட்டால் பயன் கிடைக்கும். சின்ன வெங்காயத்தின் சாற்றுடன் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.
பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.