கேரள மாநிலம் திருவனந்தபுரம் தலைமை செயலகம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு சாலையோரம் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது.
இந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் அந்த மரத்தின் மீது இருந்து ஒரு பெண் கோஷம் போடும் சத்தம் கேட்டு மேலே பார்த்தனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த மரத்தில் கயிறால் கட்டி தொங்க விடப்பட்ட ஒரு பெரிய இரும்பு கூண்டுக்குள் ஒரு பெண், அமர்ந்து கோஷம் போட்டு கொண்டிருப்பது தெரிய வந்தது.
இந்த தகவல் பரவியதும் அந்த மரத்தின் கீழே பொது மக்கள் கூடி பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுபற்றி தலைமை செயலக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு படையினரும் போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படை வீரர்கள் பெரிய ஏணி மூலம் அந்த மரத்தில் ஏறி போராடி அந்த கூண்டை கீழே இறக்கி அந்த பெண்ணை வெளியே வர செய்தனர்.
அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் இரும்பு கூண்டுக்குள் அமர்ந்து நூதன போராட்டம் நடத்தியது தெரிய வந்தது. அந்த பெண்ணின் பெயர் வீணா (வயது 40), கண்ணூர் மாவட்டம் பெருமண் பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி பெண் என்பது தெரிய வந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு பெருமண் பகுதியில் பொது இடத்தில் நின்ற மரத்தை வெட்டியதாக வீணா உள்பட 15 பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த சம்பவத்தில் தனக்கு தொடர்பு இல்லாததால் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி வீணா பல ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை.
இதனால் அவர், மரத்தில் கூண்டில் அமர்ந்து நூதன முறையில் போராட்டம் நடத்தி உள்ளார்.
அந்த பெண் அமர்ந்து போராட்டம் நடத்திய இரும்பு கூண்டு மிகவும் கனமானது. மேலும் அவரால் அந்த கூண்டை தனியாக மரத்தில் கட்டியிருக்க முடியாது என்பதால் அவரிடம் அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அதற்கு அவர் சரியான பதில் கூறவில்லை.
இதனால் அந்த பெண்ணின் போராட்டத்திற்கு உதவியவர்கள் யார்? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.