சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன.
கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பாதுகாப்பு கருதி அங்குள்ள பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியேறி விட்டனர்.
கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிரியாவை கண்மூடித்தனமாக ஆதரிப்பதை ரஷியா நிறுத்த வேண்டும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹீத்தர் நவெர்ட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியாவை கண்மூடித்தனமாக ரஷியா ஆதரிப்பதன் மூலம் அந்நாட்டில் ரசாயன தாக்குதலில் எண்ணற்ற மக்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள இந்த கொடூரமான தாக்குதலுக்கும் ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கியநாடுகள் சபையின் அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புமிக்க நாடுகளில் ஒன்றான ரஷியா, ரசாயன ஆயுதங்களை பொதுமக்கள்மீது பிரயோகிக்கும் சிரியாவை ஆதரிப்பதன் மூலம் ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 2118 என்ற எண் கொண்ட தீர்மானத்தையும் ரஷியா மீறிவிட்டது.
எனவே, கண்மூடித்தனமாக சிரியாவை ஆதரிக்கும் போக்கை ரஷியா உடனடியாக கைவிட வேண்டும். மேலும், இதைப்போன்ற காட்டுமிராண்டித்தனமான ரசாயன தாக்குதல்கள் இனியும் தொடராதவகையில் சர்வதேச சமுதாயத்துடன் ரஷியா இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.