சிரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.
2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன. கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அங்குள்ள பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள் வெளியேறி விட்டனர்.
இந்நிலையில், கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கவுட்டா நகரில் ஆதிக்கம் செலுத்திவரும் ஜைஷ் அல் இஸ்லாம் கிளர்ச்சியாளர்கள் குழுவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சிரியா அரசு இன்று முன்வந்துள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையை ஏற்று இன்னும் ஓரிரு மணிநேரத்தில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கும் என சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.