பாகிஸ்தானில் சிவில் அமைப்புகள் மீது ராணுவம் தன் அதிகாரத்தை செலுத்தத் தொடங்கி உள்ளது. அந்த வகையில், அங்கு பிரபலமான ஜியோ நெட்வொர்க் நிறுவனத்தின் சேனல்களை கேபிள் ஆபரேட்டர்களைக் கொண்டு ராணுவம் முடக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அந்த செய்தி சேனலின் தலைமை நிர்வாகி இப்ராகிம் ரகுமான் அளித்த பேட்டியில், “எங்களது தொலைக்காட்சி ஒளிபரப்பு நாட்டின் 80 சதவீத பகுதிகளில் முடக்கப்பட்டு உள்ளது” என கூறி உள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் பாகிஸ்தானில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஜியோ நியூஸ் சேனல் ஒளிபரப்பு முடக்கப்பட்டு உள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜியோ நியூஸ் சேனல் மட்டுமல்லாது அதன் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு சேனல்களின் ஒளிபரப்பையும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் முடக்கி உள்ளனர்.
இதற்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கூறுகிறது. ஆனால் ஜியோ சேனல்களை தண்டிக்கும் விதமாக அவற்றின் ஒளிபரப்பை முடக்கி இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் ராணுவம் மவுனம் சாதிக்கிறது. ஜியோ சேனல்கள் முடக்கப்பட்டு இருப்பதற்கு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கமிட்டி கவலை தெரிவித்து உள்ளது.