பேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் குறுந்தகவல்களை சேகரிப்பது குறித்த வல்லுநர்களின் கருத்துக்களுக்கு பதில் அளித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களை டிராக் செய்யப்படுவதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தும் சுமார் 20 கோடி பேரின் தகவல்கள் அறிவித்த அளவு பாதுகாப்பானதாக இருக்காது என்ற வல்லுநர்களின் கருத்துக்கு வாட்ஸ்அப் பதில் அளித்துள்ளது. வல்லுநர்களின் கேள்விகள் வாட்ஸ்அப் பயனர் விதிமுறைகளின் குறிப்பிட்ட சிலவற்றை சார்ந்து இருந்தது.
அந்த வகையில் வாட்ஸ்அப் தனது பயனர்களிடம் இருந்து மிக குறைந்த அளவு தகவல்களை மட்டுமே சேகரிக்கிறது, மற்றபடி பயனர் பகிர்ந்து கொள்ளும் குறுந்தகவல்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்வைட் லின்க் அம்சம் க்ரூப் அட்மின்கள் விரும்பினால் பயன்படுத்தக்கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை மிகவும் நம்பகத்தன்மை கொண்டவர்களிடம் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
உலகளவில் வாட்ஸ்அப் சேவையை சுமார் 100 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுந்தகவல் செயலிகளில் மிகவும் பிரபலமான சேவையாகவும் வாட்ஸ்அப் இருக்கிறது.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தை தொடர்ந்து வாட்ஸ்அப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் அந்நிறுவனம் அறிவித்தப்படி பாதுகாப்பானதாக இருக்கலாம். ஆனால் அழைப்புகள் சார்ந்த மெட்டா டேட்டாவினை அந்நிறுவனம் பயன்படுத்தலாம் என அமெரிக்க தொழிலதிபர் விவேக் வாத்வா தெரிவித்திருந்தார்.
வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் குறியீடு மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்தும் சாதனம் குறித்த தகவல்கள் ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்படுவதாக அறிவித்திருந்தது.