சமஷ்டி முறைமையை கொண்டுவரும் நேரம் இது; முஸ்லிம்களுக்கான தனி அலகை வரவேற்போம்: ரணிலுக்கு விக்னேஸ்வரன் கடிதம்
பொருளாதார ரீதியான நன்மைகள் தமிழ் மக்களை தேசிய வாழ்வுக்கு கொண்டுவந்துவிடும் என்ற பிழையான சிந்தனையில் ரணில் விக்கிரமசிங்க இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு தனியான ஒரு அலகை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் அதேவேளை தமிழ் மக்கள் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை இனமாக கருதப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை இல்லா பிரேரணையில் பிரமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றமையை வாழ்த்தி அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனை தெரிவித்துள்ள விக்னேஸ்வரன், நாடு முழுவத்துக்குமான ஒரு சமஷடி அடிப்படையிலான தீர்வை கொண்டுவரும் தக்க நேரம் இது என்றும் அதில் வலியுறுத்தியுள்ளார்.
அவர் அனுப்பிய கடிதத்தின் விபரம் வருமாறு,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை இல்ல பிரேரணையில் வெற்றி பெற்றுள்ளதை வாழ்த்துகிறேன். இது ஒருவகையில் சிறுபான்மை கட்சிகளின் அவர் மீதான நம்பிக்கை தெரிவிக்கும் வாக்குகளாக அமைந்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் சிறந்த ஒரு இலங்கையை கட்டி எழுப்புவதற்கான ஒரு நேரமாகும். பிரதானமாக இரண்டு விடயங்களில் அவர் பிழையான கருத்தை கொண்டிருக்கிறார். முதலாவதாக, சிறுபான்மை மக்களுக்கான பொருளாதார நன்மைகள் அவர்களை நாளடைவில் நாட்டின் பிரதான வாழ்வுக்கு இட்டுச்செல்லும் என்று அவர் நம்புகிறார்.
இது ஏனைய சாதாரண சிறுபான்மை மக்களுக்கு பொருத்தமாக இருந்தாலும் இலங்கை தமிழ் மக்களை பொறுத்தவரை அது பொருத்தமற்றது. பௌத்தத்துக்கு முற்பட்ட காலம் முதல் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை மக்களாக இருந்துவந்த நாம் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னரே சிறுமான்மை மக்களாக ஆக்கப்பட்டோம்.
இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு தனியான ஒரு அலகை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நாம் எம்மை வடக்கு கிழக்கில் பெரும்பான்மை இனமாக கருதப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.ஆகவே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது முதன்மையாக இருக்கிறது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு அடித்தளத்தை வெளிப்படையாக இடுவதற்கான நேரம் இது. எதிரணியினரின் அணைத்து எதிர்பார்ப்புக்களும்
தவிடுபொடியாகி உள்ளன.
ஆகவே, துணிச்சலாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நேரம் இது. இது மறுபுறத்தில் அமைத்து புலம்பெயர் மக்கள் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து மிகப்பெரும் ஆதரவை கொண்டுவரும்.
இரண்டாவதாக, தனது மாமனார் ஜெ ஆர். ஜெயவர்தனவின் நாடு முழுவதுக்கும் 13 ஆவது திருத்த சட்டத்தை பொருத்தமாக்குவது என்ற தத்துவத்தை எந்தளவுக்கு ரணில் விக்கிரமசிங்க படித்து வைத்திருக்கிறார் என்பதாகும். தமிழ் மக்களுக்கு எதனையும் தான் கொடுக்கவில்லை என்றும் முழு நாட்டுக்கும் அதிகாரத்தை பகிருவதை மட்டுமே செய்ததாக ஜே . ஆரினால் கூற முடிந்தது. அதே பாணியில் ஏன் ரணில் விக்கிரமசிங்கவினால் இரண்டு அல்லது கூடுதலான மாகாணங்கள் இணைக்கப்படக்கூடிய நாடு முழுவதுக்குமான ஒரு சமஷ்டி அமைப்பை கொண்டுவர முடியாது என்று சிந்திக்கிறேன்.
எவ்வாறெனினும், நல்லாட்சி அரசாங்கம் இன்னமும் அதிகாரத்தில் இருக்கிறது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு காணப்படுமானால் அது சிறப்பாக இருக்கும். ரணில் விக்கிரமசிங்க தனது முயற்சிகளில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.