இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சத்திரசிகிச்சை நிபுணர் அனில் அரோரா தலைமையில் கூடிய 200 நோயாளிகள் புதிய உலக சாதனையொன்றை படைத்திருக்கிறார்கள்.
ஒரு சத்திரசிகிச்சை நிபுணரிடம் அதிகளவிலான என்பு மாற்று அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள், நேற்று ஒரே இடத்தில் ஒன்றுகூடி நிகழ்த்திய இந்த நிகழ்வு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.
பேராசிரியர் அனில் அரோரா என்ற அந்த சத்திரசிகிச்சை நிபுணர், டெல்லியில் சொந்தமாக ஒரு வைத்தியசாலையை நடத்தி வருகின்றார். அதில், முழங்கால் மற்றும் இடுப்பு என்பு மாற்று சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றார்.
மூட்டு மாற்று அறுவைச்சிகிச்சை என்பது, ஒருவரின் சேதமடைந்த என்பு இணைப்பு ஒன்றை மாற்றி அதற்குப் பதிலாக புதிய சேதமில்லாத என்பு இணைப்பு ஒன்றை சத்திரசிகிச்சை மூலம் பொருத்துவதாகும்.
மூட்டு மாற்று அறுவைச்சிகிச்சை மூலம் சகல வகையான தொன்மங்கள் மற்றும் சிக்கல்களையும் குணப்படுத்தலாம் என்பது குறித்து விழிப்புணர்வூட்டும் வகையிலான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றும் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பம், உட்பொருத்துகை மற்றும் உத்திகள் மூலம் மக்களின் சகல மூட்டுப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பது இதன்போது உறுதியாகியுள்ளது.
ஒரு தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் சிகிச்சைகள் மூலம் என்பு மூட்டு பிரச்சினை உள்ள ஒருவரை மூன்று தசாப்தத்திற்கும் மேலாக வாழ வைக்க முடியும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
60 வயதுகளை நெருங்குபவர்களுக்கு முழங்கால், கால் மற்றும் இடுப்பு எலும்புப் பிரச்சினைகள் பாரிய பிரச்சினையாக தெற்காசிய நாட்டு மக்களிடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.