கடல் நீரைக் குடி நீராக்குவதற்கான கோள வடிவக் கருவியை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மரைன் டெக் என்கிற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
பிரான்சின் செயின்ட் ரபேல் நகரில் உள்ள மரைன் டெக் நிறுவனத்தின் ஆய்வகத்தில் ஒரு மீட்டர் விட்டமுள்ள கண்ணாடிக் கோளத்தின் நடுவில் ஒரு தட்டு உள்ளது.
குழாய் வழியாக இந்தத் தட்டில் விழும் தண்ணீர் சூரிய வெப்பத்தால் சூடாகி ஆவியாகிக் கோளத்தின் உச்சிக்குச் சென்று கோளச் சுவர்களில் படிந்து துளியாகி வடிகிறது என கூறப்படுகிறது.
இவ்வாறு குறித்த கோளத்தின் அடிப்பகுதியில் தூய நீர் சேகரிக்கப்படுகிறது.
மிகக் குறைந்த விலையுள்ள இந்தக் கருவி 30 ஆண்டுகள் நல்ல முறையில் செயல்படும் என்பதால் ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்தக் கருவிகளைப் பெருமளவில் கொள்வனவு செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தென்னாப்பிரிக்காவில் ஒரு லட்சம் கோளங்கள் கொண்ட ஆலையை நிறுவுவதற்குப் பணியாணை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.