விடுதலைப் புலிகள் அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.
இதில் பெருமளவான பொது மக்கள் கலந்துகொண்டதுடன், தமது இறுதி அஞ்சலியை செலுத்தியிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட குணாளன் மாஸ்டர் என அழைக்கப்படும் ஜெ.மூர்த்தி கடந்த 29ம் திகதி சுவிட்ஸர்லாந்தில் காலமானார்.
குணாளன் மாஸ்டர் 1999ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி வெளிநாட்டிற்கு சென்ற நிலையில் அங்கு வாழ்ந்து வந்தார்.
தென்மராட்சி சாவகச்சேரியை சேர்ந்த குணாளன் மாஸ்டர், சாவகச்சேரி இந்துகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் 1979 இல் சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி கற்றார்.
சாவகச்சேரியில் உள்ள ரெலிகோணரில் பணிசெய்திருந்த காலத்தில் பொன்னம்மான் மற்றும் கேடில்ஸ் ஆகியோர்களது நட்புடன் ஆரம்பமாகியதுடன், இவரது பயணத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்பவியலாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.
1983 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை தமிழீழ போராட்டத்தின் பல வரலாற்றுப் பதிவுகளின் சாட்சியங்கள் இவரின் கைகளினால் பதிவு செய்யப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக இறுதிக்காலம் வரை இவரின் பங்கு தொடர்ந்து கொண்டேதான் இருந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.