பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட சஹிவால் மாவட்டம், சிச்சாவட்னி பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கடைக்கு சென்ற நிலையில் திடீரென்று காணாமல் போனார்.
காணாமல் போன சிறுமியை அவரது குடும்பத்தார் தேடிவந்த நிலையில் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் அருகாமையில் உள்ள தெருவில் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கண்டுபிடித்தனர்.
கற்பழிக்கப்பட்ட நிலையில் 70 சதவீதம் தீக்காயங்களுடன் சிச்சாவட்னி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மேல்சிகிச்சைக்காக லாகூர் நகரில் உள்ள ஜின்னா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பகுதியில் சேர்க்கப்பட்ட சிறுமி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்
இதுதொடர்பான தகவல் பரவியதும் சிச்சாவட்னி பகுதியை சேர்ந்த மக்கள் லாகூர் நகருக்கு செல்லும் பிரதான சாலையின் குறுக்கே பலமணி நேரம் அமர்ந்து தொடர் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடையை குற்றவாளியை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.