கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
ஐ.பி.எல். 11-வது சீசனின் ஐந்தாவது ஆட்டமானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி பந்து வீச்சை தெரிவு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தான முடிவு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர்.
நரேன் சந்தித்த முதல் மூன்று பந்தில் இரண்டு சிக்ஸர் அடித்தார். அவர் 4 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து ஹர்பஜன் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய உத்தப்பா நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். லின் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடிய உத்தப்பா 29 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். ரிங்கு சிங் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அப்போது கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன்பின் அணித்தலைவர் தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி ஓட்டங்கள் குவித்தனர்.
ரசல் 26 பந்தில் அரைசதம் அடித்தார். தினேஷ் கார்த்திக் 26 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ஓட்டங்கள் எடுத்தது.
அதிரடியாக விளையாடிய ரசல் 36 பந்தில் 88 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இதில் 11 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். சென்னை அணியின் வாட்சன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
இதன்மூலம் சென்னை அணியின் வெற்றிக்கு 203 ஓட்டங்களை இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது.
இதனையடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்களாக வாட்ஸன் மற்றும் ராயுடு களமிறங்கினர்.
வாட்ஸன் துவக்கம் முதலே அதிரடி காட்ட 19 பந்துகளை சந்தித்து 42 ஓட்டங்கள் குவித்தார். ராயுடு 26 பந்துகளை சந்தித்து 39 ஓட்டங்கள் குவித்தார்.
தொடர்ந்து ரய்னா 12 பந்தில் 14 ஓட்டங்களுடன் நரேன் பந்தில் வெளியேற டோனியுடன் பில்லிங்ஸ் களம் கண்டார்.
டோனி நிதானத்துடன் விளையாடி 28 பந்தில் 25 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார்.
பில்லிங்ஸ் 23 பந்தில் 56 ஓட்டங்கள் குவித்து உத்தப்பாவிடம் கேட்ச் தந்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஜடேஜாவுடன் பிராவோ களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஜடேஜா 7 பந்துகளில் 11 ஓட்டங்களும், பிராவோ 5 பந்துகளில் 11 ஓட்டங்களும் குவித்து சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.