காவிரி மேலாண்மை அமைக்க கோரி சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், அமீர், கருணாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்றிரவு 8 மணிக்கு தொடங்குகியது. இந்த போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது .
இதனால், ஐபிஎல் போட்டி வீரர்களுக்கும், போட்டி நடக்கும் மைதானத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்ணாசாலையைத் தாண்டி சேப்பாக்கம் மைதானம் நோக்கி செல்லும் சாலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, சீமான், அமீர், கருணாஸ், கௌதமன் ஆகியோர் அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
சிறிது நேரம் கழித்து போலீசார் பாரதிராஜா, சீமான், அமீர், கருணாஸ் உள்ளிட்ட போராட்டகாரர்களை கைது செய்தனர். மேலும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர் அனைவரையும் போலீசார் கலைந்து செல்லும் வலியுறுத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.