வணக்கம்
சமயத் தலைவராக இருப்பதனால், உங்களிடம் புரிதல் இருக்கும் என்ற நோக்கின் அடிப்படையிலும் அனுபவம் உள்ள ஆயர் என்பதாலும் இந்த கடிதத்தை எழுதத் துாண்டியது.
ஆயர்கள் அரசியல் செய்ய வேண்டும் என்பதல்ல. ஆனால் தங்கள் சமூகத்தின் உரிமைக்காக குரல் எழுப்ப வேண்டும், அவ்வாறு எழுப்பினார்கள் என்பது உலக வரலாறு.
அந்த அடிப்படையில் கத்தோலிக்க திருச்சபையின் தமிழ் ஆயர்கள், அருட்தந்தையர்கள் சமயப்பணிகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் பெரும் பங்களிப்புச் செய்தனர் என்பதை யாவரும் அறிவர்.
தமிழ் சிங்கள இனமுரண்பாடு ஆரம்பித்த காலத்தில் இடம்பெற்ற அஹிம்சைப் போராட்டத்தில், கத்தோலிக்க திருச்சபை ஆற்றிய பங்களிப்பு தொடர்பாக உலகம் அறியும்.
1983இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தபோது நிதானமாக செயற்பட்ட கத்தோலிக்க திருச்சபை, இனப்பிரச்சினை விவகாரம், சர்வதேச மயப்படுவதற்கு கால்கோளாக செயற்பட்டது என்பது வரலாறு.
அந்த அடிப்படையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள், அருட்தந்தையர்கள் அரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் சேர்ந்து இயங்கியது கிடையாது. அல்லது அரசாங்கத்துக்கு வால்பிடிப்பத்தும் இல்லை.
1981ஆம் ஆண்டு யாழ் ஆயர் இல்லத்திற்குச் சென்ற அப்போதைய பிரதமர் அமரர் ஆர் பிரேமதாசாவுடன் முன்னாள் ஆயர் தியோகுப்பிள்ளை எப்படி உரையாடினார் என்றும், ஆத்திரமடைந்த பிரேமதாச தேநீர் கூட அருந்தால், ஆயர் இல்ல வளவில் நின்ற செவ் இளநீர் மரத்தில், இளநீர் பிடிங்கி குடித்துவிட்டுச் சென்றதையும் நீங்கள் அறியாதவர் அல்ல.
1989 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றபோது சிங்கள ஆயர்கள் வாழ்த்துச் சொன்னார்கள். ஆனால் ஆயர் தியோகுப்பிள்ளை வாழ்த்து தெரிவிக்கவில்லை. மாறாக தமிழர்களின் அரசியல் உரிமை விடயத்தில் நீதியாக செயற்பட வேண்டும் என்று மாத்திரம் ஆயர் இடித்துரைத்தார்.
வடக்கு கிழக்கு, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணம் என்பதை நிருப்பிப்பதற்காக ஆயராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே, தியோகுப்பிள்ளை 1960களில் தீவிரமாக செயற்பட்டவர்.
1967இல் திருகோணமலை மாவட்டத்துடன் மட்டக்களப்பு மறைமாவட்டமும் இணைக்கப்பட்டது. அதன் முதலாவது பதில் ஆயராக தியோகுப்பிள்ளை நியமிக்கப்பட்டார். பின்னர் 1972இல் அவர் யாழ் ஆயராக பொறுப்பேற்றார்.
அதன் பின்னர்தான் திருகோணமலை- மட்டக்களப்பு மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் எல்லையோரமாக இருந்த சில பிரதேசங்கள் அனுராதபுரம் மறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
அவ்வாறு அனுராதபுரத்துடன் இணைக்கப்பட்டதை அன்று ஆயர் தியோகுப்பிள்ளை உட்பட அன்றைய அருட்தந்தையர்கள் பலர் விரும்பவில்லை. ஆனாலும் கத்தோலிக்க திருச்சபை என்ற கட்டுப்பாட்டுக்கு கீழ் அதனை ஏற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
எனினும், அன்றில் இருந்து கிழக்கு மாகாணத்தில் முற்று முழுதாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும் என்ற நோக்கில் அங்கு இரண்டு தமிழ் மறைமாவட்டங்கள் உருவாக்கப்பட்ட வேண்டும் என அன்று முதல் பாடுபட்டவர் ஆயர் தியோகுப்பிள்ளை.
அதன் பயனாகவே 2012ஆம் ஆண்டு மட்டக்களப்பு மறை மாவட்டம் புதிய தனி மறை மாவட்டமாக வத்தாக்கானில் பாப்பரசரினால் பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போது மட்டக்களப்பு ஆயராகவுள்ள ஜோசப் பொன்னையா அதற்கான பணியை தீவிரமாக முன்னெடுத்தவர்.
ஆயர் தியோகுப்பிள்ளையின் முயற்சியினால்தான் மன்னார் மறை மாவட்டமும் 1981இல் தனி மறை மாவட்டமாக பிரகடனம் செய்யப்பட்டது. இல்லையேல் மடு தேவாலயம் உள்ளிட்ட மன்னாரின் ஒரு பகுதி அனுராதபுரம் மறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு தமிழர் நிலம் பிரிக்கப்பட்டிருக்கும்.
ஆகவே இந்த நான்கு மறை மாவட்டங்கள் மூலமாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் எல்லைகள் உறுதிப்படுத்தப்படுகின்றன. அரசியல் காரணங்களுக்காக கத்தோலிக்க திருச்சபை இந்த விடயங்களை முக்கியத்துவப்படுத்தி வெளிப்படுத்துவதில்லை.
ஆயரே உங்களுக்குத் தெரியும், ஆயர் தியோகுப்பிள்ளை, கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பில் இருந்த அப்போதைய பேராயர் நீக்கலஸ் மாக்கஸ் பெர்னான்டோவுடன் 1992ஆம் ஆண்டு வரை பேசியது கிடையது என்று.
காரணம் என்ன? பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னான்டோ, இலங்கை அரசாங்கத்தின் நண்பனாக செயற்பட்டவர். பௌத்தர்களின் தேசியச் சின்னம் ஒன்றையும் சிங்கம் பொறிக்கப்பட்ட தேசியக் கொடியையும் திருப்பலிப் பூஜைகள் இடம்பெறும்போது ஆலையத்தில் வைக்குமாறு பேராயர் நீக்கலஸ் மார்க்கஸ் அன்று கட்டளையிட்டிருந்தார்.
ஆனால், ஆயர் திருயோகுப்பிள்ளை அதனை ஏற்கவில்லை. வடக்கு கிழக்கில் உள்ள தேவாலயங்களில் திருப்பலிப் பூஜை இடம்பெறும்போது, திருப்பலிப் பீடத்திலும் தேவாலயத்தின் எந்த இடத்திலும் எந்தக்கொடியும் ஏற்றப்படமாட்டது என அடித்துக் கூறியிருந்தார் ஆயர் தியோகுப்பிள்ளை.
இதன் காரணத்தால் ஏறத்தாழ 10 வருடங்களு்க்கும் மேலாக, பேராயர் நீக்கலஸ் மார்க்கஸ் பெர்னான்டோவுடன் ஆயர் தியோகுப்பிள்ளை பேசியதே கிடையாது. ஆனால் 1992ஆம் ஆண்டு யாழ் மரியண்னை பேராலயத்தில் இடம்பெற்ற ஆயரின் பொன், வெள்ளி, பவழ விழாவில் கலந்து கொள்ள பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னான்டோ வருகை தந்தார். அன்றுதான் ஆயர் தியோகுப்பிள்ளை அவருடன் பேசினார்.
அப்போது, கொம்படி பாதையால்தான் யாழ்ப்பாணத்திற்கு நடந்து செல்ல வேண்டும். அதுவும் சேறும் சகதியும் நிறைந்த பாதை. இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில், அந்தப் பாதையினால் வருகை தந்த பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னான்டோ, யுத்தத்தில் தமிழ் மக்கள் படும் வேதனைகள், அவலங்கள் எப்படி இருக்கும் என்பதை கொம்படிப்பாதை எடுத்துக்காட்டியதாக மனம் திறந்து கூறியிருந்தார்.
அதுவரையும் பேராயருக்கு யுத்தத்தின் கொடுமைகள் தெரியாமல் இருந்தது. அல்லது தெரியாதது போன்று நடித்தார் எனலாம். எவ்வாறாயினும், அந்தப்பாதையால் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த பின்னர்தான், ஆயர் தியோகுப்பிள்ளை தமிழ் மக்களுக்காக பேசி வரும் விடயங்களை நியாயப்படுத்தினார் பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னான்டோ.
இலங்கை அரசாங்கத்துடன் ஆயர் தியோகுப்பிள்ளை ஏன் பேசவிரும்புவதில்லை என்ற காரணத்தைக் கூட, பேராயர் நிக்கலஸ் மார்க்கஸ் ஏற்றுக் கொண்டார். பேராயர் சிலாபத்தைச் சேர்ந்த தமிழரக இருந்தும் சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்த 23 தமிழ் பாடசாலைகளை சிங்கள பாடசாலையாக மாறுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு இடமளித்தார் என்பதுதான் ஆயர் தியோகுப்பிள்ளையின் குற்றச்சாட்டும் கவலையும்.
ஆனாலும் இறுதிநேரத்தில் போராயர் நிக்கலஸ் மார்க்கஸ் ஆயர் தியோகுப்பிள்ளையின் தமிழ் மக்கள் சார்பான நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டார். சமயப்பணி வேறு அரசியல் செயற்பாடுகள் வேறு. ஆனால் இரண்டையும் ஒருங்கமைத்து செயற்பட்டவர் ஆயர் தியோகுப்பிள்ளை என்று பேராயர் நீக்கலஸ், 2003ஆம் ஆண்டு ஆயர் தியோகுப்பிள்ளை உயிரிழந்தபோது புகழாரம் சூட்டியிருந்தார்.
அபோன்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் யுத்தகாலத்தில் விடுதலைப் புலிகளின் சில செயற்பாடுகளையே நேரடியாக விமர்சித்தவர், கண்டித்தவர். அதற்காக, இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை படையினருக்கும் ஆயர் முண்டு கொடுத்தது கிடையாது.
தமிழர்களின் அரசியல் போராட்டத்தை சர்வதேச அரங்கில் நியாயப்படுத்தி பேசியவர் ஆயர் இராயப்பு யோஜசப். இறுதிப் போரில் இடம்பெற்றது இனபடுகொலை என்பதை ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு எடுத்துக் கூறியிருந்தார்.
இவ்வாறு ஆயர்கள் மாத்திரமல்ல, பல அருட்தந்தையர்கள், தங்கள் உயிர்களையே போராட்ட காலத்தில் தியாகம் செய்துள்ளனர். 1982ஆம் ஆண்டு அருட்தந்தை சிங்கராயர் கைது செய்யப்பட்டது முதல் கத்தோலிக்க திருச்சபை தமிழர்களின் போராட்டத்தில் தன்னை வெளிப்படையாக ஈடுபடுத்திக் கொண்டது என்று கூட சொல்ல முடியும்.
அதன் தொடர்ச்சியாக 1985ஆம் ஆண்டு அருதந்தை செபஸ்தியாம்பிள்ளை, மன்னார் தேவாலயம் ஒன்றில் வைத்து படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
ஆகவே இந்த வரலாறுகளின் பின்னணியில், ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களே உங்களிடம் சில கேள்விகள்–
முன்னாள் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், ஆயர் தியோகுப்பிள்ளை போன்று தீவிரமாக செயற்படவில்லை. ஆனால் இலங்கை அரசாங்கத்துக்கு நண்பனாகவும் இலங்கை இராணுவத்தின் நெருங்கிய தொடர்பாளனாகவும் செயற்படவில்லை.
ஆனால் நீங்கள் அதற்கு மாறாக செயற்படுவதன் நோக்கம் என்ன?
அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப், சென் பற்றிக்ஸ் கல்லூரியில் 35 ஆண்டுகள் சேவையாற்றினார். அதில் 12 ஆண்டுகள் அதிபராக இருந்து ஓய்வு பெற்று இறுதியாக வன்னியில் சேவையாற்றிக் கொண்டிருந்தார். அவர் தலைமையில் படையினரிடம் சரணடைந்த சுமார் 150 இற்கும் அதிமான போராளிகள் பற்றி இதுவரை தகவல் இல்லை. அருட்தந்தை உயிருடன் இருக்கின்றார? இல்லையா? என்று கூட எதுவும் தெரியாது.
இந்த நிலையில், அவர் 35 ஆண்டுகள் சேவையாற்றிய சென் பற்றிக்ஸ் கல்லூரியின் கட்டடத் திறப்பு விழா ஒன்றிக்கு உங்களால் எவ்வாறு ஜனாதிபதியை பிரதம விருந்தினராக அழைக்க முடிந்தது?
சாதாரண தமிழ் அரசியல்வாதிகள் போன்று அல்லது வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள வேறு பாடசாலைகளின் நிர்வாகம் செயற்படுவது போன்று நீங்கள் செயற்பட முடியாது. ஏனெனில் அவர்கள் அரச அதிகாரிகள். அதற்காக ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் ஆகியோரை பிரதம விருந்தினராக அழைக்க வேண்டிய தேவை உள்ளது என்று கூறினால், அதில் ஒருவகை நியாயம் இருக்கலாம்.
ஆனால் உங்களுக்கு அவ்வாறான எந்தவொரு அரசியல் தேவையும் இல்லையே? சென் பற்றிக்ஸ், தனியார் கல்லூரிதானே? உங்கள் ஆயர் நியமனம் அதன் சேவைகள், தேவைகள் எல்லாமே வத்திக்கானில் தீர்மானிக்கப்படுகின்றன. ஆகவே எதற்காக ஜனாதிபதியை அழைத்து கட்டடத்தை திறக்க வேண்டும்?
அல்லது படையினரிடம் சரணடைந்த அருட்தந்தை பிரான்ஸிஸ் உட்பட போராளிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் பற்றிய தகவல்களை ஜனாதிபதி வெளிப்படுத்தி விட்டாரா?
குற்றவாளிகளுக்கு தன்டனை கொடுத்து விட்டாரா? ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதா?
எதற்காக அவரை பிரதம விருந்தினராக அழைத்தீர்கள்? எதற்காக கச்தீவு அந்தோணியார் ஆலயத்தில் சிங்கள மொழியிலும் திருப்பலிப்பூஜை ஒப்புக் கொடுத்தீர்கள்?
ஆயரே உங்கள் நோக்கம் என்ன? இராணுவத்தையும் இலங்கை அரசாங்கத்தையும் முடிந்தவரை பயன்படுத்தி திருச்சபைக்கு தேவையான எதையாவது செய்ய வேண்டும் என்பதா?
அப்படியானால் 70 ஆண்டுகால அரசியல் போராட்டம் எதற்கு? ஏன் இத்தனை அழிவுகளும் வந்தன?
சாதாரண தமிழ் அரசியல்வாதிகள் வேண்டுமானால் இலங்கை அரசாங்கத்திடம் மண்டியிடலாம். ஆனால் ஆயர் என்ற தகுதி நிலையில் இருக்கும் உங்களுக்கு அப்படியான ஒரு தேவை எழுவேண்டிய அவசியமே இல்லையே?
சமயப்பணியுடன் தமிழ் மக்களுக்கான அரசியல் பணியையும் ஆயாகளான தியோகுப்பிள்ளை, இராய்ப்பு ஜோசப், மற்றும் அருட்தந்தையர்கள் பலர் ஈடுபட்டது பேன்று நீங்களும் செய்யுங்கள். இல்லையேல் தயவுசெய்து சமயப் பணியோடு மாத்திரம் நின்று விடுங்கள்.
அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படும் சாதாரண தமிழ் அரசியல்வாதிகள் போன்று 70 வருடகால அரசியல் போராட்டத்தின் பெறுமதியை மலினப்படுத்த வேண்டாம்.
எழுதுவதற்கும், உங்களிடம் கேட்பதற்கும் இன்னும் நிறைய உண்டு. ஆனால் இந்த கடிதத்தை மேலும் நீட்டிச் செல்ல விரும்பவில்லை. ஆயர்களான தியோகுப்பிள்ளை, இராஜப்பு ஜோசப்இ மற்றும் படையினரால் கொல்லப்பட்ட அருட்தந்தையர்களின் தமிழ் உலகுக்கான சேவையை மேலும் மேம்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுங்கள்.
சமயங்கள் வேறாக இருந்தாலும், தமிழர்கள் என்ற தேசிய உணர்வுடன் இன்று வரை இயங்கும் மக்களுக்கு உந்து சக்கதியாக இருங்கள் ஆயரே. அது உங்களால் முடியும். உங்களுக்கு புத்திமதி சொல்லவதாக கருத வேண்டாம். ஆனால் இந்தக் கடிதம் காலத்தின் கட்டாயத் தேவை என்பதை சகலரும் அறிவர்.
என பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளது கீழ் குறித்த ஊடகம்
நன்றி
இப்படிக்கு
ஐ.பி.சி.தமிழ் ஆசிரிய பீடம்