ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்கள் தன்னுடன் நீண்டநேர சந்திப்பொன்றை நடத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பை அண்மித்த நகரான தலவத்துகொட பகுதியில் வீட்டுத் திட்டமொன்றிற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் நேற்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தினோம். அதேபோல சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர் ஜனாதிபதியை சந்தித்த அதேவேளை நானும் அக்கட்சியைச் சேர்ந்த சிலருடன் சந்திப்பை நடத்தியிருந்தேன். நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வது பற்றி புதிய வேலைத்திட்டமொன்று உருவாக்குவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது. இந்த வேலைத்திட்டம் மிகவிரைவில் அமுல்படுத்தப்படும் என நம்புகிறேன் என்று பிரதமர் தெரிவித்தார்.