தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள் இது காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்திருக்கும்.
இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். இதனை ஆண்டு கணக்காக வைத்திருந்தாலும் கெடாது என்பது குறிப்பிடத்தக்கது.
அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சுத்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும்.
நரம்புத்தளர்ச்சியும் நீங்கி விடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புபவர்கள் தினமும் தேனை அருந்த வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடலாம். தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.
தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பிக்கலாம். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும்.
ஊளைச்சதை குறையும். உடல் உறுதி அடையும். சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு, எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்தீர்களானால் நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், தும்மல் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் மருந்து தயார்.
அடிக்கடி சளி பிடித்தால் இளஞ்சூடான பாலில் சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் பருகி வர நல்ல பலன் கிடைக்கும். உடல் மெலிந்தவர்கள் தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வர உடல்வாகு சீராகும்.
எந்த வயதினராக இருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு டேபிள் ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும்.
நெய்யையும், தேனை சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும். மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.