கித்துல்கல – கலுகொஹதென்ன பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் திடீரென நுழைந்த நபரொருவர் அங்கிருந்த மூன்று பேரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த மூவரும் கித்துல்கல – தெலிகம மற்றும் கரவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டின் மீது நேற்று இரவு 10.30 மணியளவில் இனந்தெரியாத நபரொருவரால் கைக்குண்டொன்று வீசப்பட்டுள்ளது.
எனினும் , குறித்த கைக்குண்டு வெடிக்காத நிலையில் , வீட்டின் பின்புற வாயிலில் நுழைந்த மற்றுமொரு நபர் வீட்டில் இருந்த 56 வயதுடைய தம்பதியினரையும் , அங்கிருந்த பெண்ணொருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
பின்னர் , காயமடைந்தவர்கள் கித்துல்கல – தெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சத்திர சிகிச்சைக்காக கரவனெல்ல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காணி தகராறு காரணமாக இந்த சம்பவங்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக தாக்குதலுக்கு உள்ளான நபரின் மகள் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
கித்துல்கல காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.