காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சரவண சுரேஷ் என்ற இளைஞர் உடலில் பெற்றோல் ஊற்றி தீவைத்துக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம், விருதுநகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனரின் மகன் சரவண சுரேஷ் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது, அருகிலிருந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வேறு ஏதும் காரணம் இருக்குமா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் நியூட்ரினோவை எதிர்த்து வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க நிர்வாகி ரவி தீக்குளித்து இறந்தார். இந்த நிலையில், வைகோவின் மைத்துனர் மகன் தீக்குளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வைகோ ஊடக அறிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எத்தனையோ துன்பங்களைத் துயரங்களை என் துணைவியார் தாங்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள் அலைபேசியில் கதறி அழுவது என் நெஞ்சைப் பிளக்கிறது.
நொறுங்கிப்போன இதயத்தோடு, ‘யாரும் தீக்குளிக்காதீர்கள்’ என்று கரம் கூப்பி வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜம் அவர்களின் மகன், சரவண சுரேஷ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றுபவர் எனவும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து நேற்று நான் ஆற்றிய உரையை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மிகவும் மனம் உடைந்து கவலையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து, ”நான் நடக்கப்போகிறேன் என்று கூறி வெளியே சென்று, சூலக்கரை தீ வைத்துக்கொண்டான்.
உடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில், என் மருமகனை தற்போது மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசெல்கிறார்கள்.
உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உச்சந்தலையில் இடி விழுந்ததைப்போல, எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது எனவும் இனி யாரும் தீக்குளிக்காதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.