அவுஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாக குடியேற அரசு தற்போது வழங்கிவரும் விசாக்களைப் பெறும் இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட ஆசியர்களின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை அவுஸ்திரேலியாவுக்கு நிரந்தரமாக குடியேற அரசு வழங்கும் மொத்த விசாக்களில் சுமார் பத்தாயிரம் விசாக்களை அவுஸ்திரேலியாவில் பணிசெய்யும் நியூசிலாந்து நாட்டவருக்கு வழங்க அரசு தீர்மானித்துள்ளதாக மேலுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை குறைப்பிற்கு அரசின் அமைச்சரவை ஒப்புதலோ அல்லது நாடாளுமன்ற ஒப்புதலோ அவசியமில்லை என்ற காரணத்தினால் இம் மாற்றம் உடனடியாகவே நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால் குடியேறுபவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்று கூறமுடியாது. விசா எண்ணிக்கை குறைக்கப்படாமல் நியூசிலாந்து நாட்டவர்கள் இந்த முறையில் விசா வழங்க சேர்க்கப்பட்டுள்ளனர் என குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 44000 விசாக்களை அவுஸ்திரேலிய அரசு தற்போது வழங்கி வருகிறது.
இதில் சுமார் பத்தாயிரம் விசாக்கள் நியூசிலாந்து நாட்டவருக்கு வழங்கப்படுவதால் இனி பிற நாட்டவருக்கு சுமார் 33000 விசாக்களே வழங்கப்படும்.
இதனால் இந்திய, சீன பின்னணி கொண்ட விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவர் என தெரிகிறது.
கடந்த ஆண்டில் (2016 – 2017) நாட்டில் நிரந்தரமாக குடியேற அரசு வழங்கிய 44000 விசாக்கள் கொடுக்கப்பட்டது.
அதில் இந்திய நாட்டினருக்கு 14484, சீனா 6071, பிரிட்டன் 3462, பாகிஸ்தான் 3050, பிலிப்பின்ஸ் 2697, மலேசியா 1234, என்ற வகையில் விசாக்கள் கொடுக்கப்பட்டது.