வாகரை – சல்லித்தீவு கடற்கரைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீனவர் ஒருவரின் மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி வலைகள் என்பன தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரை வடக்குப் பிரதேசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினரான கதிர்காமத்தம்பி சந்திரமோன் என்பவரின் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன்பிடி படகே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கூறுகையில், “தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்களே இச்சம்பவத்தில் சம்மந்தப்பட்டுள்ளனர். குறித்த விடயம் ஒரு அரசியல் பழிவாங்கலாகும்.
வாகரை வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை தக்க வைக்க என்னிடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மிரட்டல் விடுத்தபோதும், அவர்களின் கட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை.
அதனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திரவியம் என்பவர், “ஆதரவு வழங்காவிடின் ஆட்சியில் இருக்கமாட்டாய்” என என்னை அச்சுறுத்தினார்.
பிள்ளையானின் ஆதரவாளர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்தனர். அதனால் பல நாட்களாக தலைமறைவாகி இருந்தேன்” எனத் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக வாகரைப் பொலிஸாரும் குற்றத் தடயவியல் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தடயங்களும் ஆராயப்பட்டன