சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சங்சா விமான நிலையத்தில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங் நோக்கி 1350 எண் கொண்ட ‘ஏர் சைனா’ விமானம் இன்று காலை 8.40 மணியளவில் பயணத்தை ஆரம்பித்தது.
இந்நிலையில் சுமார் 10 மணியளவில் ழெங்ழோ நகர விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி ‘எக்சிகியூட்டிவ் கிளாஸ்’ பகுதியில் கூரிய ஆயுதத்தை வைத்து விமானப்பணிப் பெண்ணை சிறைபிடித்து வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மிரட்டி வருவதாக தெரிவித்து அவசரமாக தரையிறங்க அனுமதி கோரியுள்ளார்.
இதனையடுத்து ழெங்ழோ விமான நிலையத்தில் ஏராளமான பொலிசாரும் பாதுகாப்பு மற்றும் அதிரடிப் படையினரும் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்களும் குவிக்கப்பட்டன.
அந்த விமானம் தரையிறங்குவதற்குள் பணிப்பெண்ணை சிறைபிடித்து வைத்திருந்த நபர்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி அவரை விடுவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அப்போது அந்த மர்மநபர் பேனா முள்ளை(நிப்பு) பணிப்பெண்ணின் கழுத்தில் வைத்து மிரட்டிய விபரம் தெரியவந்துள்ளது. பிடிபட்ட நபர் யார்? இந்த நாடகம் எதற்காக நடந்தது? என்பது தொடர்பான தகவல்கள் எதவும் வெளியிடப்படாத நிலையில் இந்த சம்பவம் நடைபெற்ற விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தின் மூலம் பீஜிங் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.