தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள், வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களை மீளக் கையளிக்கப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் நெல்லை மாவட்டத்தில் ஆழ்வார் குறிச்சியில் இடம்பெற்ற நூல் வெளியீட்டை அடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இனப்பிரச்சினையின் போது தமிழ் மக்களின் சொத்துக்கள் சிங்கள மக்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.
இனப் பிரச்சினைக்கு மத்தியில் ஸ்ரீலங்காவில் வாழ நினைக்கும் தமிழ் மக்கள் சிங்களவர்களால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருவதாக அவர் கூறியுள்ளார்.
இனப் பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு சென்றுள்ள 10 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என சி.வி.விக்னேஸ்வரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் சொத்துக்களை பல சிங்கள மக்கள் ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசாங்கமும் பல பிரச்சினையை கொடுப்பதாக கூறியுள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் பலவீனமடையவில்லை என்கின்ற போதிலும் சீனாவுடனான ஸ்ரீலங்காவின் உறவு வலுவடைந்துள்ளதை அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டுள்ளார்.