முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே இரண்டாவது தடவையாக இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிதிமோசடி பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
எனினும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தினால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிவகித்த மஹிந்தானந்த அளுத்கமகே மீது கடந்த 2014ஆம் ஆண்டு கெரம் போட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு காணப்படுகிறது.
இதுதொடர்பில் இன்று திங்கட்கிழமை காலை வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அழைக்கப்பட்டிருந்தார்.
வாக்குமூலத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரணை செய்த நீதவான் லங்கா டி ஜயரத்ன, 35,000 ரூபா ரொக்கம் மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிட்டிருந்தார்.
இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்வதற்காக அதனை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தர்.
எனினும் பிணை நிபந்தனையில் ஒன்றான கடவுச்சீட்டை ஒப்படைப்பதற்கு தவறிய குற்றச்சாட்டில் மீண்டும் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இரண்டாவது தடவையாகவும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்